தினமும் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்: கலெக்டர் அறிவுறுத்தல்
வேலூர் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் தினமும் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என ஆட்சியர் சுப்புலட்சுமி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் கோடைக்காலத்தில் குடிநீர் வினியோகம் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் உமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு கலெக்டர் சுப்புலெட்சுமி தலைமை தாங்கி ஊரக பகுதிகளில் குடிநீர் வினியோகம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் தனித்தனியாக கேட்டறிந்தார்.இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஆட்சியர் பேசுகையில், "வேலூர் மாவட்டத்தில் உள்ள சில ஊராட்சிகளில் 2,3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த பகுதிகளில் தினமும் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் வழங்க முடியாத கிராமங்களுக்கு அந்த பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறு, திறந்தவெளி கிணறு உள்ளிட்டவற்றின் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய வேண்டும்.
அதேபோன்று ஏதாவது ஒரு பகுதியில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டால் அதனை ஒரே நாளில் தீர்க்க வேண்டும். அல்லது 3 நாட்களுக்குள் அந்த பிரச்சினை சரிசெய்து சீராக குடிநீர் வழங்க வேண்டும்,"என்றார்.