மாணவர்களை ஏற்றி செல்லாத ஓட்டுநர், நடத்துனர் சஸ்பெண்ட்
சிசிடிவி காட்சி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து ஆரல்வாய்மொழி செல்லும் அரசு பஸ் நேற்று முன்தினம் செண்பகராமன் புதூர் சந்தை வழியாக தாழக்குடிக்கு சென்றது. அங்கு கடைத்தெரு பகுதியில் அந்த பஸ் ஒரு பயணியை இறக்கிவிட்டு புறப்பட தயாரானது. அப்போது அங்கு பள்ளிக்கு செல்வதற்காக காத்திருந்த மாணவ மாணவிகள் பஸ்ஸை கண்டதும் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் பஸ் டிரைவர் பஸ்ஸை வேகமாக எடுத்து புறப்பட்டார். ஆனாலும் பஸ்ஸில் ஒரு மாணவி மட்டும் ஏறினார். மற்ற மாணவ மாணவிகள் பஸ்ஸில் ஏற சிறிது ஓடி சென்றனர். ஆனாலும் பஸ் நிற்க்காமல் சென்று விட்டது.
இந்த காட்சி அந்தப் பகுதியில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த நிலையில் இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதை பார்த்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அரசு பஸ் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்த நாகர்கோவில் மண்டல அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் மெர்லின் ஜெயந்தி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு, அரசு பஸ் டிரைவர் சீலன், கண்டக்டர் சகாயம் ஆகிய இரண்டு பேரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.