திருமுக்கூடல் பாலாற்றில் வறட்சி
நீரின்றி காய்ந்து கிடக்கும் பாலாறு
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்தில், 200க்கும் மேற்பட்ட ஏரிகள், நுாற்றுக்கணக்கான குளங்கள், குட்டைகள் என நீர்நிலைகள் உள்ளன. மேலும், உத்திரமேரூர் ஒன்றிய கிராமங்களையொட்டி, பாலாறு மற்றும் செய்யாற்று படுகை உள்ளது. இந்த நீர்நிலைகள் நிறைந்திருப்பினும், கோடைக்காலத்தில் நிலத்தடி நீர் மட்டம் ஒரேயடியாக வேகமாக குறைந்து போவதாக விவசாயிகள் பலரும் புலம்புகின்றனர். உத்திரமேரூர் வட்டாரத்தில் அதிக அளவில் செயல்படும் கல் குவாரிகளும் நிலத்தடி நீர் மட்ட குறைவுக்கு காரணம் என கூறப்படுகிறது.
மேலும், பாலாற்றில் திருமுக்கூடலிலும், செய்யாற்றில் வெங்கச்சேரியும் தவிர மற்ற பகுதிகளில் தடுப்பணை இல்லாததால், ஆண்டுதோறும் பருவ மழைக்காலத்தின் போது ஆற்றில் வரும் தண்ணீர் தேக்கி வைக்கப்படாமல் வீணாகிறது. இதனால், மழைக்காலத்தில் நீர்நிலைகளில் நிரம்பி வழியும் தண்ணீர், அடுத்த ஓரிரு மாதங்களில் காணாமல் போகிறது. விரைவில் கோடைக்காலம் துவங்க உள்ள நிலையில், உத்திரமேரூர் சுற்றிலும் தற்போதே ஏரி மற்றும் குளங்களில் தண்ணீர் வற்றி வருகிறது.
இந்நிலையில், பினாயூர், பழவேரி மற்றும் திருமுக்கூடல் பாலாற்று நீரோடைகளில், ஆங்காங்கே உள்ள தண்ணீர் தேக்க பகுதிகளில், பல வகையான பறவைகள் தினமும் வந்து தண்ணீர் குடிப்பதோடு, மீன், புழுக்கள் போன்ற இரைகளை தேடுகின்றன. சின்ன நாரை, நீர்க்கோழி உள்ளிட்ட பறவைகளை இப்பகுதி பாலாற்று ஓடைகளில், நாள் முழுதும் காண முடிகிறது."