போலீஸ் ஸ்டேஷன் முன்பு குடிமகன் அட்டகாசம்: கடும் போக்குவரத்து பாதிப்பு

குமாரபாளையத்தில் போலீஸ் ஸ்டேஷன் முன்பு குடிமகன் ஒருவர், சாலையில் படுத்து புரண்டு அட்டகாசம் செய்ததில் கடும்  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நேற்று காலை முதல், வெயில் இல்லாமல் மேக மூட்டமாக இருந்தது. வெப்பம் இல்லாமல் பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர். மாலை 03:00 மணியளவில் திடீரென்று பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. இந்த மழை சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் மழை நீர் சாலையில் மற்றும் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கோம்பு பள்ளத்தில் வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையில் குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் முன்பு, குடி போதையில் ஒரு நபர், நடு ரோட்டில் நின்றும், உட்கார்ந்தும், படுத்தும் அட்டகாசம் செய்து கொண்டிருந்தார். அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் எங்கே, அவர் மீது மோதி விடுவோமோ என பயந்த படி, தங்கள் வாகனங்களை நிறுத்தி நிதானமாக சென்றனர். போலீசார் வெகு நேரம் முயற்சித்தும் அந்த நபரை அங்கிருந்து அப்புறப்படுத்த முடியவில்லை. மழைநின்ற பின் அவராக தவழ்ந்து சாலையோரம் சென்று படுத்துக்கொண்டார். இரண்டு மணி நேரமாக இவரது அட்டகாசம் நீடித்தது. சேலம் கோவை புறவழிச்சாலையில் வழக்கமாக சனி, ஞாயிறு நாட்களில் வாகனங்கள் அதிக அளவில் செல்வது வழக்கம். நேற்று ஞாயிறு என்பதாலும், கோடை விடுமுறை என்பதாலும் அதிக அளவில் வாகனங்கள் சென்றன. இதில் கன மழை பெய்ததால், தற்காலிக சர்வீஸ் சாலையில் சேறும், சகதியுமாக இருந்ததால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags

Next Story