போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி - ஆட்சியர் துவக்கி வைப்பு
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.கல்லூரியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில், போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்ததாவது: போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் 1989 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூன் 26 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. போதைப்பொருள் பயன்பாடு இல்லாத உலகத்தை அடைவதற்கான நடவடிக்கை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது,
மேலும் இது உலகம் முழுவதும் உள்ள தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளால் ஆதரிக்கப்படுகிறது. சட்டவிரோத போதைப்பொருள் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய பிரச்சனை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும். ஒரு வேதிப்பொருள் மாற்றத்தால் நமது உடம்பு இயங்குகிறது. அதில் ஒரு சில வேதிபொருட்கள் மாற்றத்தினால் மூளையில் சென்று, ஒரு சில ஹார்மோன்கள் சுரக்க வைக்கும். அப்பொழுது தான் மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஆரம்ப கட்டத்திலேயே அதனை தடுக்காவிட்டால், அதனை சார்ந்த ஒரு மனிதனாகவே மாறிவிடுவார். இதில், உடலில் ஏற்படக்கூடிய மாற்றத்தினால் தான் மகிழ்ச்சி ஏற்படுகிறது.
துருவப்பகுதிகளில், மனிதர்களுக்கு உணவுப்பொருட்கள் எளிதாக கிடைப்பதில்லை. அவர்கள் வேட்டையாடி தான் உணவினை பெறுவார்கள். அதாவது விலங்கினை வேட்டையாடுவதற்காக தேடுவார்கள். அதற்கு பல நுட்பங்களை கையாண்டு தான் வேட்டையாடுகின்றன. கூர்மையான கத்தி போன்ற பொருட்களை கொண்டு தான் வேட்டையாடி அதன் மீது இரத்தத்தை ஊற்றி தான் வேட்டையாடுவார்கள்.அப்பொழுது விலங்கிலிருந்து முழுவதுமாக இரத்தம் வெளியேறி இறந்து விடும். இதுபோன்று தான் ஒரு மனிதன் பயன்படுத்தக்கூடிய போதைக்கு உதாரணமாக கூறலாம். இரத்தம் எவ்வாறு விலங்கிற்கு சுவையாக இருக்கிறதோ அதே போல் போதைப்பொருட்களிலிருந்து வரும் இன்பம் என்பது அந்த போதைப்பொருட்களினால் கிடைக்கக்கூடிய இன்பம் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் அது உண்மையல்ல. அது உங்கள் உடலில் உள்ள வேதி மாற்றங்களால் உங்கள் உடல் உறுப்புகள் சிதைந்து அதன் மூலமாக வரக்கூடிய இன்பம் தான் போதைப்பொருட்களுக்கான இன்பம் ஆகும். ஒருவருடைய வாழ்நாளில் ஆரோக்கியமாக எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தோம் என்றால் அவருடைய மொத்த வாழ்நாளில் 30000 நாட்கள் வாழ்கிறார் என்றால் அதில் 27000 நாட்களாவது ஆரோக்கியமாக வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலும் போதைப்பொருள்களில் அடிமையானவர்கள் ஒருநாளில் 3 மணி நேரமாவது வீணடிக்கிறார்கள். ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய செல்வம் என்பது அவனது கையில் இருக்கக்கூடிய நேரம் தான். அந்த நேரத்தையும், உடலையும் முழுமையாக அளிக்கக்கூடியது போதைப்பழக்கம் தான். திருவள்ளுவர் 2000 வருடங்களுக்கு முன்பாக எழுதிய கள்ளுண்ணாமை என்ற குரல் “ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி” என்ற குறளில் மகனின் எந்த ஒரு செயலையும் பொருத்துக் கொள்ளும் தாய், ஒருவன் போதை பழக்கத்தால் மயங்கி இருக்கின்ற மகன் தன்னுடைய முகத்தை பார்ப்பதைக் கூட பெற்ற தாய் விரும்ப மாட்டார் என வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், போதைப் பழக்கத்திலிருந்து ஒரு பத்து நபர்களை விடுவித்தால் நீங்கள் படித்த படிப்பிற்கும் சமுதாயத்திற்கும் ஒரு மாற்றமாக இருக்கும் என்றும், உடலையும், மனதையும் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும் எனவும், அரசு மருத்துவமனையிலும் போதை மீட்பு மையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விருதுநகர,; அருப்புக்கோட்டை காரியாபட்டி, சாத்தூர் என அனைத்து இடங்களிலும் உள்ளது. அதில் 3 அல்லது 6 வாரங்களில் சரிசெய்து விடலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். பின்னர், போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் கல்லூரி மாணவ, மாணவியர்கள், பேராசிரியர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். முன்னதாக, சர்வதேச போதைப்பொருட்கள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.