போதையில் தகராறு: விவசாயி கொலை - இளைஞர் கைது
தஞ்சாவூரில் போதையில் ஏற்பட்ட தகராறில் விவசாயியைக் கொலை செய்த இளைஞரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மதன் (42). விவசாயி. இவர் சனிக்கிழமை காலையிலிருந்து மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த தனது மைத்துனர் ஜெய்சங்கருடன் மோட்டார் சைக்கிளில் ஜெபமாலைபுரத்துக்கு மாலையில் சென்றார். பின்னர், இவர் அப்பகுதியிலுள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனைக்கு எதிரே உள்ள காலி மனையில் மது அருந்திக் கொண்டிருந்தார். அதே பகுதியில் வடக்கு வாசல் ஏ.வி.பதி நகரைச் சேர்ந்த முனுசாமி மகன் வினோத் (22) கஞ்சா போதையில் இருந்தாராம். அப்போது, போதையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறில் ஒருவரையொருவர் கட்டையால் தாக்கிக் கொண்டனர். இதில், கீழே விழுந்த மதனின் தலையில் வினோத் அருகே கிடந்த குழவிக் கல்லை எடுத்து போட்டார். இதனால், பலத்த காயமடைந்த மதன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து கள்ளப்பெரம்பூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து வினோத்தை கைது செய்தனர்.
Next Story