கனமழை காரணமாக சாலையில் கழிவுநீருடன் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்தது. வெயிலின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் வெளியில் செல்லாமல் வீடுகளுக்குள் முடங்கினர். இந்நிலையில் அருப்புக்கோட்டையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று அருப்புக்கோட்டை நகர் பகுதிகளான புளியம்பட்டி, வேலாயுதபுரம், காந்தி மைதானம், சொக்கலிங்கபுரம், நெசவாளர் காலனி, விருதுநகர் ரோடு, மதுரை ரோடு, ராமசாமிபுரம், பந்தல்குடி ரோடு, திருச்சுழி ரோடு, வெள்ளக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து சுமார் ஒரு மணி நேரம் கன மழை பெய்தது.
கனமழை காரணமாக பூக்கடை பஜார், காந்தி மைதானம், விருதுநகர் ரோடு, மதுரை ரோடு, குமரன் புது தெரு, வேலாயுதபுரம் பிள்ளையார் கோவில் தெரு உள்ளிட்ட நகரின் பல இடங்களில் மழை நீரோடு கலந்து சாலைகளில் சாக்கடை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
மழை நீரோடு கலந்து சாக்கடை நீர் ஆங்காங்கே தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.