அதிகாரிகள் அலட்சியத்தால் விசைத்தறி தொழிலாளர் குழந்தைகள் கல்வி பாதிப்பு
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் விசைத்தறி தொழிலாளர் குழந்தைகள் கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள வால்ராசம்பாளையம் ஏரோ டெக்ஸ் விசைத்தறி கூடத்தில் பணிபுரிந்த சுமார் எட்டு குடும்பங்களை சேர்ந்த 27 க்கும் மேற்பட்டோர் கடந்த 9.2.2024 திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியரை நேரில் சந்தித்து, தாங்கள் பணிபுரியும் விசைத்தறிக்கூடத்தில் முறையாக கூலி வழங்குவதில்லை, ஒப்பந்தம் முறையாக அமல்படுத்துவதில் எனக் கூறினர். மேலும் எங்களால் தொடர்ந்து அங்கு பணிபுரிய முடியவில்லை, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், நாங்கள் வாங்கிய முன் பணத்தினை கட்ட வாய்தா வாங்கி கொடுப்பதுடன், எங்களிடம் விசைத்தறி நிர்வாகம் பெற்றுள்ள செக் சிலீப், வெற்று பேப்பர் கையெழுத்து, பாண்டு பேப்பர், மற்றும் எங்கள் முன்பணத்திற்கு உறவினரின் ஜாமீன் பத்திரம் நாங்கள் பணிபுரிந்த விசைத்தறி கூடத்தில் உள்ள வீட்டில் உள்ளது. மேலும் எங்கள் உடைகள் ,சமையல் பாத்திரங்கள் மற்றும் பள்ளி குழந்தைகளின் யூனிபார்ம் பாட புத்தகங்கள் ஆகியவை அங்கேயே உள்ளது. எனவே அதையும் மீட்டு தர வேண்டும் என கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் பிரச்சனைக்கு உரிய தீர்வு எட்டும் வரை உறவினர் வீட்டில் தங்குமாறும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த தொழிலாளர்களை அனுப்பி வைத்தார். கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு மேலாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், உயிருக்கு பயந்து குடியிருந்த வீட்டை விட்டு வெளியேறி, கையறு நிலையில் காவேரி ஆர்.எஸ். உள்ளிட்ட பகுதியில் விசைத்தறி தொழிலாளர்களின் உறவினர்கள் உள்ளிட்ட வீடுகளில் வசித்து வருகின்றனர். மேலும் தொடர்ந்து பிரச்சனைக்கு உரிய தீர்வு எட்டப்படாத நிலை தொடர்வதால் தண்ணீர் பந்தல் பாளையம் அரசுப் பள்ளியில் ,படித்த நிதினியா, மீரா, ஏசுராஜ் ஆகிய மூன்று குழந்தைகளின் கல்வி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களின் பாடப்புத்தகம் மற்றும் யூனிபார்ம் உள்ளிட்டவை விசைத்தறி நிர்வாகம் உள்ள குடியிருப்பு வீட்டில் உள்ளதால், அவர்கள் மேற்கொண்டு கல்வி கற்க முடியாத நிலையில் ,பள்ளி செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது .இது குறித்து நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.அசோகன் அவர்கள் கூறும் பொழுது ,அரசுத்துறை அதிகாரிகளின் அலட்சிய போக்கினால் விசைத்தறி தொழிலாளர்கள், அவதிக்குள்ளாகி வருவதுடன், விசைத்தறி தொழிலாளர்களின் குழந்தைகளும் கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே பாதிக்கப்பட்ட விசைத்தறி தொழிலாளர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளின் செயலைக் கண்டித்தும், உடனடியாக தலையிட்டு பேசி தீர்வு கண்டு அரசு பள்ளியில் பயிலும் விசைத்தறி தொழிலாளர் குழந்தைகளின் கல்வி பாதிப்பின்று தொடர்ந்திடவும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வருகிற 1.3.2024 காலை 10 மணிக்கு நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சார்பாக தொழிலாளர்களுக்கு ஆதரவாக, பள்ளிபாளையம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை திரட்டி காத்திருப்புப் போராட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
Next Story