செத்தாலும் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் - துரை வைகோ பேச்சு

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம். வேறு வேட்பாளரை கூட நிறுத்துங்கள் ஆனால் சின்னத்தை மாற்றி நிற்க முடியாது என பேச்சு.

இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பாக திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ அறிமுக மற்றும் செயல்வீரர் கூட்டம் இன்று திருச்சியை கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேரு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ரகுபதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய துரை வைகோ, நாங்கள் திராவிட குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். திராவிட இயக்கத்திற்கு ஒரு பிரச்சினை என்றால் முதலில் வந்து நிற்கும் இயக்கம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம். வைகோ உடல்நிலை சரியில்லாமல் போன காரணத்தால் கட்சி நிர்வாகிகள் வற்புறுத்தலின் காரணமாக விருப்பமின்றி அரசியலுக்கு வந்துள்ளேன். எனது அப்பா ஒரு சகாப்தம். அவருக்கு தலைக்குனிவு வந்துவிடக்கூடாது என அரசியலுக்கு வந்துள்ளேன் என உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார். அப்போது கூட்டத்தில் இருந்து எந்த சின்னத்தில் போட்டியிட்ட போகிறீர்கள் என நிர்வாகிகள் கேட்டதற்கு சற்று ஆக்ரோஷமாக செத்தாலும் செத்தாலும் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம். கட்சிக்காக தந்தைக்காக மட்டுமே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறேன் என பேசினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story