காட்டங்குளத்தூர் அருகே புழுதி பறக்கும் சாலை: வாகன ஒட்டிகள் அவதி
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ரெட்டிபாளையம்-தேவனுார் சாலை, 2 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையை புதிதாக அமைக்க கடந்த செப்டம்பர் மாதம் பணிகள் துவங்கப்பட்டன.
முதலமைச்சர் கிராம இணைப்பு சாலை திட்டத்தில், 90.50 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய சாலை அமைப்பதற்காக, பழைய சாலை முழுதும் அகற்றப்பட்டு ஜல்லிக்கற்கள் பெயர்க்கப்பட்டன.
இதனால் சாலையில் புழுதி படிந்துள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது, பாலுார் ரயில்வே கேட் பகுதியில் பணிகள் நடைபெறுவதால், தேவனுார் - ரெட்டிபாளையம் சாலையில், கடந்த சில நாட்களாக அதிக அளவில் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையில் செம்மண் புழுதி பறப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க தடுமாறுகின்றனர். சாலை அமைக்கும் பணிகளும் மந்தகதியில் நடைபெற்று வருகின்றன.
எனவே, புழுதி பறக்காமல் இருக்க சாலையில் லாரிகள் மூலம் தண்ணீர் ஊற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.