இ-நம் சந்தைபடுத்துதல்: விவசாயிகளுக்கு பயிற்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டார வேளாண்மைத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் முத்தம்பட்டி கிராமத்தில், அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒழுக்குபடுத்தப்பட்ட சந்தைகள், இ-நம் மற்றும் செயல்திறன் பயன்பாடு குறித்து பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப்பயிற்சிக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முனைவர் கருப்பையா தலைமை வகித்து, பயிற்சியில் மாநில திட்டங்கள், நெல், நிலக்கடலை பயிர்களுக்கு பயிர் காப்பீட்டு செய்தல் குறித்தும், ஐந்திலை கரைசல் தயாரித்தல் குறித்து செயல் விளக்கம் செய்து விவசாயிகளுக்கு காண்பிக்கப்பட்டது.
துவரை மற்றும் உளுந்து கலப்புப்பயிர் சாகுபடி, மக்காச்சோளப்பயிரில் படைப்புழுவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார். இப்பயிற்சியில் கிருஷ்ணகிரி வேளாண் விற்பனை மற்றும் வனிகத்துறையின் வேளாண்மை அலுவலர் சுமித்ரா தேசிய மின்னனு வேளாண் சந்தை மற்றும் பண்ணை வர்த்தகம் குறித்து விளக்கினார். உதவி வேளாண்மை அலுவலர் கவிரேகா ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களின் நோக்கம் மற்றும் வேளாண் விளைப்பொருள்களின் பரிவர்த்தனையை முறைப்படுத்துதல் குறித்து விளக்கி கூறினார். பர்கூர் உதவி வேளாண்மை அலுவலர் குமார், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் சேவைகள் மற்றும் பயன்கள், இ}நம் திட்டம், இ-நம் இல் வர்த்தகம் செய்யப்படும் பொருட்கள் விவரம் குறித்து விளக்கினார். உதவி வேளாண்மை அலுவலர் அஷ்டலட்சுமி மானிய திட்டம், இடுபொருள் விநியோகம் குறித்து விளக்கினார்.
வட்டார தொழில் நுட்ப மேலாளர் சதீஷ்குமார் ஐந்திலைகரைசல் தயாரித்தல் குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்ப மேலாளர் சாரதி செய்திருந்தார். இப்பயிற்சியில் சிறு தானிய தொழில் நுட்ப கையேடுகளை விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் வழங்கினார். இதில் 40 க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் கலந்துகொன்டனர்.