தொடர் சர்ச்சையில் திருச்சி ஈ.வெ.ரா கல்லூரி - மாணவர்களிடம் மோசடி

தொடர் சர்ச்சையில் திருச்சி ஈ.வெ.ரா கல்லூரி - மாணவர்களிடம் மோசடி

பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி

திருச்சி ஈவெரா கல்லூரி மாணவர்களிடம் ஆங்கில புத்தகத்திற்காக ரூ.2.70 லட்சம் வசூலித்து விட்டு புத்தகம் தராமல் ஏமாற்றியதை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என இந்திய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.

திருச்சி ஈவெரா கல்லூரி அரசு கல்லூரியாக இருந்தாலும் தன்னாட்சி அந்தஸ்துடன் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி மூலம் ஏற்கனவே ஆயிரக்கணக்கான கிராமபுற ஏழை எளிய மாணவ மாணவிகள் பட்டம் பெற்று பல்வேறு இடங்களில் பணியாற்றி வருகின்றனர். அரசின் முக்கிய பதவிகளிலும், அரசியலிலும் கால் ஊன்றி கல்லூரிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில காலமாக இக்கல்லூரி தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருவது முன்னாள் மாணவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 2022-2023 கல்வி ஆண்டில் சேர்ந்த பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., ஆகிய இளங்கலை முதலாம் ஆண்டு மாணவ மாணவிகள் 1,500 பேரிடம் crescendo என்ற ஆங்கில புத்தகத்திற்காக 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆன்லைன் மூலம் தலா 255 ரூபாய் வசூலிக்கப்பட்டது.

முதலாம் ஆண்டு இரண்டாவது பருவ தேர்வுக்கு மட்டும் புத்தகம் வழங்கப்பட்டது. இரண்டாம் ஆண்டு 3வது பருவத் தேர்வுக்கு புத்தகம் வழங்கப்படவில்லை. வாட்ஸ் அப்பில் பிடிஎஃப் வடிவில் புத்தகம் மாணவ மாணவிகளுக்கு ஆங்கிலத் துறை சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தேர்வில் 1500 மாணவ மாணவிகளும் குறிப்பிட்ட ஆங்கில பாடத்தில் தேர்ச்சி பெற்றுவிட்டனர். அடுத்து தற்போது நான்காவது பருவ தேர்வை இந்த பிரிவு மாணவ மாணவிகள் எழுத உள்ளனர். தற்போது வரை இதற்கான புத்தகம் விநியோகம் செய்யப்படவில்லை. புத்தகம் விநியோகம் செய்யப்படாததால் மீதமுள்ள ரூ.180 என மொத்தம் ரூ.2.70 லட்சம் பணத்தை திரும்ப கொடுக்கும்படி மாணவ மாணவிகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

இந்நிலையில் இந்த பிரச்சினையை இந்திய மாணவர் சங்கம் கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக கல்லூரி முதல்வரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த புத்தகத்திற்கு பதிலாக அதே மதிப்புடைய டிஎன்பிஎஸ்சி போன்ற மாற்று புத்தகங்களை வழங்குவது குறித்து பேச்சு நடத்தப்பட்டது. ஆனால் இதற்கு மாணவ மாணவிகள் சம்மதிக்கவில்லை. புத்தகத்தை வழங்க வேண்டிய நிறுவனமும் கல்லூரி தான் பொறுப்பு என்று கூறி நழுவி கொண்டனர். ஆனால் மாணவ மாணவிகள் மாற்று புத்தகத்தை வாங்கி எங்களுக்கு பயனில்லை. ஆகையால் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்பிரச்சனையை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் மோகன் அறிவித்துள்ளார். இதே போல் கடந்த 2023ம் ஆண்டு கல்லூரியில் ஆங்கிலத் துறையில் எம்.ஏ. ஆங்கிலம் முதலாம் ஆண்டு 2வது பருவத் தேர்வுக்கு நடத்த வேண்டிய பாடத்தை விட்டுவிட்டு பாடத்திட்டத்தில் இல்லாத வேறு ஒரு பாடத்தை நடத்தியதாக மாணவர்கள் எழுப்பிய புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பாடம் மாற்றி நடத்தப்பட்ட தேர்விலும் அனைத்து மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல் திருச்சி ஈவேரா கல்லூரி தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருவது முன்னாள் மாணவர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story