கொளுத்தும் வெயில் - மண்பானை விற்பனை ஜோர்
மண்பானை விற்பனை
தமிழகத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த 40 நாட்களுக்கு மேலாக 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் பலர் ஏற்காடு, ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களை தேடி சென்று வருகிறார்கள்.
கடந்த காலங்களில் நமது முன்னோர்கள் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள மண்பானை தண்ணீரை குடித்து வந்தனர். இதனால் பொதுமக்கள் மீண்டும் தங்களது வீடுகளில் மண்பானை தண்ணீரை பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.பொது இடங்களிலும் மண்பானைகளில் தான் தண்ணீர், மோர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மண்பானைகள் விற்பனை அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக குழாய் பொருத்திய மண்பானைகள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மண்பானை விற்பனையாளர்கள் கூறும் போது, சேலத்துக்கு தஞ்சாவூர், மதுரை, புதுச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து மண்பானைகள் கொண்டு வரப்படுகின்றன. கோடை காலம் தொடங்கி உள்ளதால் பானை விற்பனை அதிகரித்து உள்ளது. உருண்டை பானை ரூ.200 முதல் ரூ.1,500 வரை விற்கப்படுகிறது. இதேபோல் குழாய் பொருத்திய பானைகளும் தண்ணீரின் அளவுக்கு ஏற்ப ரூ.300 முதல் விற்பனை செய்யப்படுகிறது. வாகனத்தின் வாடகை உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஆண்டை விட இந்தாண்டு ஒரு பானைக்கு ரூ.50 வரை விலை உயர்ந்துள்ளது என்று கூறினர்.