சமுதாயத்தை உயர்த்த கல்வி பயன்பட வேண்டும் - செயற்கைகோள் மைய இயக்குநர்
பட்டமேற்பு விழா
தஞ்சாவூர், பட்டமளிப்பு விழா
தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற 64- ஆவது பட்டமளிப்பு விழாவில் யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மைய இயக்குநர் மு.சங்கரன் பேசியது: நட்பு வட்டம் மிகுந்த கல்லூரி வாழ்க்கை கவலை இல்லாத மகிழ்ச்சியானது, ஆனால், நாம் பெறும் பட்டம் மட்டுமே நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்காது. வேலைக்கு நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும். கல்லூரி வாழ்க்கையை மிகுந்த பயனுடையதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
கல்லூரியில் முழுமையாகப் படித்திருந்தால் மட்டுமே தேர்வுகளில் எளிதாக வெற்றி அடையலாம். பொறுமையாக, நிதானமாக, பதற்றம் இன்றி, புரிந்து படிக்க வேண்டும். அவ்வாறு படித்தால் போட்டித் தேர்வுகளில் நாம் வெற்றி பெறமுடியும். பாடத்துக்கு சொந்தமாகக் குறிப்புகளைத் தயார் செய்பவர்கள் போட்டித் தேர்வில் எளிமையாக வெற்றி பெற முடியும். சொந்தமாக தொழில் செய்வது என்றாலும், அதற்கும் தங்களைத் தகுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.
அரசு பள்ளிகளில், அரசு கல்லூரிகளில் படித்தவர்கள் தற்போது உயர் பதவிகளில் உள்ளனர். சமுதாயத்தை முன்னேற்ற நம் கல்வி பயன்பட வேண்டும். நாம் மட்டுமல்ல மற்றவர்களையும் சமூகத்தையும் முன்னேற்ற வேண்டும் என்றார் சங்கரன்.
பின்னர், 1,148 மாணவ, மாணவி யகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. இவர்களில் பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் தர வரிசையில் இடம்பெற்ற 22 மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பதக்கம் வழங்கப்பட்டது.முன்னதாக, விழாவுக்குக் கல்லூரி முதல்வர் து.ரோசி தலைமை வகித்தார். தேர்வு நெறியாளர் பெ.ஜெயகுமார், தமிழ்ப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் சி.அமுதா, பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்கள் ரெ. கோவிந்தராசு, அருணாசலம் வி.பாரி, முன்னாள் மாணவர் சங்கச் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.