தஞ்சாவூரில் உருவபொம்மை எரிப்பு போராட்டம்
மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி பெற சூழ்ச்சியாகச் செயல்படும் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே. ஹல்தரின் உருவபொம்மையை பிப்ரவரி 16 ஆம் தேதி எரித்து போராட்டத்தில் ஈடுபடுவது என காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் இக்குழுவின் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. இதில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தெரிவித்தது: காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தில் கடந்த காலங்களில் ஒவ்வொரு கூட்டத்திலும் மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு ஒப்புதல் பெறுவதற்காக ஆணையத் தலைவர் எஸ்.கே. ஹல்தர் நிகழ்ச்சி நிரலில் வைத்து வந்தார்.
அப்போதெல்லாம் அதிமுக ஆட்சியிலும், திமுக ஆட்சியிலும் தமிழ்நாடு சார்பாகக் கலந்து கொண்ட நீர்வளத் துறைச் செயலர்கள், மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை நிகழ்ச்சி நிரலில் வைத்தால், கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்வோம் என எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அப்போதெல்லாம் மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை விவாதப் பொருளில் வைக்காமல் ஹல்தர் பின்வாங்கிக் கொண்டார். இந்நிலையில், பிப்ரவரி 1 ஆம் தேதி நடைபெற்ற காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் வழக்கம்போல மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை நிகழ்ச்சி நிரலில் ஹல்தர் வைத்தார்.
வழக்கத்துக்கு மாறாக தமிழ்நாடு நீர்வளத் துறைக் கூடுதல் தலைமைச் செயலர் சந்தீப் சக்சேனா இக்கூட்டத்தில் கலந்து கொண்டு மேக்கேதாட்டு அணை விவாதத்துக்கு வந்தபோது, எதிர்த்து வாக்களித்துள்ளார். இதேபோல, புதுச்சேரி மாநில அலுவலரும் எதிர்த்து வாக்களித்தார். காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தில் வாக்களிக்கும் அலுவலர்கள் மொத்தம் 9 பேர். இவர்களில் 5 பேர் மத்திய அரசு துறை அலுவலர்கள். நான்கு மாநிலங்களுக்கு தலா ஒருவர்.
இதில், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்கள் நிரந்தரமாக சிறுபான்மையாக உள்ளது. எனவே, அமோகப் பெரும்பான்மையுடன் மேக்கேதாட்டு அணை தீர்மானம் நிறைவேறியுள்ளது. இந்த உண்மை தெரிந்திருந்தும் நிகழ்ச்சியைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்யாமல் தமிழ்நாடு, புதுச்சேரி அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மரமம் என்ன? இத்தீர்மானம் நிறைவேறியவுடன் மத்திய நீர் வளத் துறைக்கு ஹல்தர் அனுப்பிவிட்டார்.
இது குறித்து தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன என்ற விளக்கம் தராமல் இருப்பதன் மர்மம் என்ன? இந்தத் திட்டத்துக்குச் சூழ்ச்சியாகச் செயல்படும் ஹல்தரின் உருவபொம்மை எரிப்பு போராட்டம் தஞ்சாவூரில் பிப்ரவரி 16 ஆம் தேதி நடைபெறவுள்ளது என்றார் மணியரசன். காவிரி உரிமை மீட்புக் குழுப் பொருளாளர் த. மணிமொழியன், வெள்ளாம்பெரம்பூர் துரை. இரமேசு,
சாமி. கரிகாலன், கலைச்செல்வன், தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலர் கி.வெங்கட்ராமன், பழ. ராசேந்திரன், நா. வைகறை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.