மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதி மூதாட்டி சாவு கணவர் படுகாயம் !
விபத்து
சேலம் சிவதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி ராணி (வயது 62). நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் அம்மாபேட்டை குமரகிரி பகுதியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மோட்டார் சைக்கிளில் சென்றனர். சீலநாயக்கன்பட்டி பைபாஸ் மேம்பாலம் வழியாக ஆத்தூர் மெயின் ரோட்டில் அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, சீலநாயக்கன்பட்டி பாலம் அடிப்பகுதியில் இருந்து, மேம்பாலம் நோக்கி, ஏறிய சரக்கு வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் கோவிந்தராஜ், ராணி ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மூதாட்டி ராணி பரிதாபமாக உயிரிழந்தார். கோவிந்தராஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று இறந்த ராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.