தேர்தல் விழிப்புணர்வு பலூன் பறக்க விடுதல்
நாமக்கல்லில் தேர்தல் விழிப்புணர்வு பலூன் பறக்க விடுதல், பேரணி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நாமக்கல் பாராளுமன்றத் தேர்தல் 2024 ஐ முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி சார்பில் நாமக்கல்லில், தேர்தல் விழிப்புணர்வு பலூன் பறக்க விடுதல், பேரணி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான Dr. ச. உமா, நகராட்சி அலுவலக மேல் மாடியில் நகராட்சி பணியாளர்களோடு இணைந்து, தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஹீலியம் நிரப்பப்பட்ட பலூனை வானில் பறக்க விட்டார். இந்த பலூனில் என் வாக்கு என் உரிமை, வாருங்கள் 100% வாக்களிப்போம், தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த பலூன் ஆனது 100 மீட்டர் உயரத்தில் தொடர்ந்து பறந்து தேர்தலில் வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. தொடர்ந்து நகராட்சி அலுவலக வளாகத்தில், பாராளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஏற்கப்பட்டது. நகராட்சி ஆணையால் செண்ணு கிருஷ்ணன், பணியாளர்கள் அலுவலர்கள் உள்ளிட்டோர் வாக்களிப்பது மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்த உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அதுகுறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில், நகராட்சி பணியாளர்கள் ஏராளமானோர் விழிப்புணர்வு பதவிகளை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். முன்னதாக இந்நகராட்சி அலுவலக வளாகத்தில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தையும் மாவட்ட ஆட்சித் தலைவர் தேர்தல் அலுவலர் ச. உமா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனமானது நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சென்று அனைவரும் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி பிரச்சாரத்தை மேற்கொள்கிறது. இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சென்னு கிருஷ்ணன், தேர்தல் பிரிவு அலுவலர்கள், நகராட்சி பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story