திருநங்கைகள் பங்கு பெற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணி
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, தலைமையில் திருநங்கைகள் பங்கு பெற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நாமக்கல் நகராட்சி பூங்கா சாலையில் இன்று , தேர்தல் பொதுப்பார்வையாளர் ஹர்குன்ஜித்கௌர் முன்னிலையில் மக்களவை பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி திருநங்கைகள் பங்கு பெற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மக்களவைப் பொதுத்தேர்தல் 2024 –ல் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்திடும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் நாளான ஏப்ரல் 19 (வெள்ளிக்கிழமை) அன்று வாக்களிக்க தகுதியுடைய அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டு பேரணியாக சென்று பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். மேலும், ”ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உடைய இந்திய குடிமக்களாகிய நாங்கள் எந்த ஒரு ஜாதி, மதம், இனம், வகுப்பு மற்றும் மொழி பாகுபாட்டிற்கும் ஆட்படாமல் எதிர்வரும் மக்களவை பொது தேர்தலில் வாக்களிப்பேன் என உளமாற உறுதி கூறுகிறேன்” எனும் வாக்காளர் உறுதிமொழியினை திருநங்கைகள் அனைவரும் ஏற்று கொண்டனர்.
Next Story