தேர்தல் புறக்கணிப்பு பதாகையால் பரபரப்பு

எல்லப்பாளையம் புதூரில் அடிப்படை வசதி செய்து தரவில்லை என்றால் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் என பொதுமக்கள் வைத்துள்ள பதாகைகளால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுக்காவிற்கு உட்பட்ட எல்லப்பாளையம் புதூர் ஊராட்சிக்கு சேர்ந்த சக்தி விநாயகபுரத்தில் சுமார் 250க்கும்‌ மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் வசிப்பவர்கள் அங்குள்ள பகுதிகளில் விவசாயம், கூலி வேலை மற்றும் அருகிலுள்ள நகர்ப்புறங்களுக்கு சென்று வேலை பார்த்து வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் பெருமளவில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாக இருப்பதனால் அவர்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து கொள்ள முடியவில்லை. மேலும் இங்கு பொதுமக்களின் அடிப்படை வசதிகளில் ஒன்றான நீண்ட நாள் கோரிக்கையாக பொது கழிப்பிடம் கட்டி தர‌ வேண்டும் என பொதுமக்கள் சார்பில் அரசு அதிகாரிகளிடமும், கட்சி நிர்வாகிகளிடமும் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் தற்போது வரை எந்தவொரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

எனவே பொதுமக்கள் அனைவரும் அரசின் மீது அதிருப்தி அடைந்து‌ ஊரின் முக்கிய இடமான கோவில் பகுதியில் ஊர் பொதுமக்களின் எதிர்ப்பை தெரிவிக்கும்‌ வகையில் பதாகைகள் வைத்துள்ளனர். அதில் "எங்களது நீண்ட நாள் கோரிக்கையான பொது கழிப்பிடம் அமைத்து தரும் வரை கட்சி சார்ந்த விழாக்கள் நடத்த எங்கள் ஊரில் அனுமதியில்லை என்றும் தேர்தலுக்கு முன்பு இதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவில்லை என்றால் வரும் நாடாளுமன்றத் தேர்தலை நாங்கள் புறக்கணிக்க நேரிடும், மேலும் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் நிரந்தரமாக கட்சி சார்ந்த கொடி கம்பங்களுக்கு அனுமதியில்லை" என்றும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags

Next Story