அடிப்படை வசதிகள் கேட்டு தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்

அடிப்படை வசதிகள் கேட்டு தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்

தஞ்சாவூர் அருகே இனாத்துக்கான்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர கோரி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தஞ்சாவூர் அருகே இனாத்துக்கான்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர கோரி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தஞ்சாவூர் அருகே இனாத்துக்கான்பட்டி கிராமத்தில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத காரணத்தால், தேர்தலை புறக்கணிப்பதாக கூறி பொதுமக்கள் ஊரின் மையப் பகுதியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலில் வாக்களிக்க தேர்தல் ஆணையம் வழங்கிய பூத் சிலிப்பை வாங்கவும் மறுப்பு தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் அருகே இனாத்துக்கான்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தற்போது 150 வீடுகளில், 650 வாக்காளர்கள் உள்ளனர். இந்த கிராமத்தைச் சுற்றி விமானப்படை தளம் விரிவுபடுத்தப்பட்டதால், இந்த கிராமத்துக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கி வரும் அடிப்படை வசதிகள் கொஞ்சம் கொஞ்சமாக மறுக்கப்பட்டு இந்த கிராமம் தனித்து விடப்படும் சூழலுக்குள்ளாகி வருகிறது. இந்நிலையில், அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு வரும் இக்கிராமத்தில், வருகிற மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பது என கிராம மக்கள் முடிவு செய்து அதற்கான காத்திருப்பு போராட்டத்தை இன்று தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து கிராமத்தைச் சேர்ந்த பி.கதிரேசன் என்பவர் கூறுகையில்: எங்களது கிராமத்தில் 650 வாக்காளர்கள் உள்ளனர். நாங்கள் பல ஆண்டுகளாக எங்களது ஊரில் இருந்த பள்ளிக்கூடத்தில் வாக்களித்து வந்தோம். அந்த பள்ளிக்கூடம் பழுதானதாக கூறி இடித்துவிட்டனர். இடிக்கப்பட்ட பள்ளிக்கூடத்தை திரும்ப கட்டவில்லை. இங்கு படிக்கும் மாணவர்கள் அருகில் உள்ள வீட்டின் திண்ணையில் படித்து வருகின்றனர். பள்ளிக்கூடம் இல்லாததால், எங்களை வேறு ஊருக்குச் சென்று வாக்களிக்குமாறு கூறுகின்றனர். ஆனால் வேறு எங்கும் செல்ல முடியாது. எங்கள் ஊரிலேயே வாக்களிக்க வாக்குச்சாவடி ஏற்படுத்தி தரவேண்டும். மேலும், கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டி அடிக்கடி பழுது ஏற்படுகிறது. முறையாக தண்ணீர் கிடைக்கவில்லை என பல முறை கூறியும் அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. எனவே எங்களுக்கு மேல்நிலை நீர்தேக்க குடிநீர் தொட்டி வசதி ஏற்படுத்தி தர வேண்டும். சாலை ஆங்காங்கே பழுதாகியுள்ளதால், அதனை சீரமைக்க வேண்டும். மயானத்துக்கு செல்லும் சாலை, அங்கு கொட்டகை ஆகியவை அமைத்து தர வேண்டும். கொரோனா காலத்துக்கு முன்பு வரை இயக்கப்பட்ட மினி பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும். ஏற்கெனவே இங்கு இயங்கிய அஞ்சலகத்தை மீண்டும் இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி தான் நாங்கள் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் முடிவு செய்துள்ளோம். மேலும், கிராமத்தில் உள்ள வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்க வந்த அதிகாரிகளிடம் நாங்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவதால் எங்களுக்கு பூத் சிலிப் வேண்டாம் எனக் கூறிவிட்டோம்.

அதே போல் எங்களது ஊருக்கு இதுவரை வேட்பாளர்கள் யாரும் வரவில்லை. நாங்களும் அவர்களை வாக்கு கேட்டு வரவேண்டாம் எனக் கூறிவிட்டோம். எங்களுடைய உரிமைகளை மீட்க இந்த தேர்தலை புறக்கணிப்பது என முடிவு செய்துள்ளோம்" என்றார். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது: இனாத்துக்கான்பட்டியில் தேர்தல் புறக்கணிப்பு என்ற தகவல் தற்போது தான் கிடைத்துள்ளது. அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Tags

Next Story