திமுக வுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் அரசு அலுவலர் மீது புகார்
கன்னியாகுமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் சொக்கலிங்கம் என்பவர் தலைமையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் ஸ்ரீதரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, கன்னியாகுமாரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோவாளை தாலுகா பகுதிகளில் கடந்த சில நாட்களாக திமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இணைந்து தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒரு நபர் பிரச்சாரம் செய்து வருகிறார்.
தான் ஒரு அரசு அலுவலர் என்பதை பகிரங்கமாக மக்களிடைய தெரிவித்து, திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் போல் செயல்பட்டு வருகிறார். திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசுர பிரதிகளை மக்களிடம் கொடுத்து தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.
இதனால் அரசு அலுவலர் ஒருவர் கட்சி பணி செய்வது மக்களிடையே பெரும் பரபரப்பையும், அரசியல் கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே தேர்தல் நடத்தை விதிகளை மீறி சட்டத்திற்கு புறம்பாக கட்சிப் பணி செய்யும் சம்மந்தபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.