தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தேர்தல் பார்வையாளர் உத்தரவு
ஆலோசனை கூட்டம்
சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பறக்கும் படை, வீடியோ பதிவு செய்யும் குழு மற்றும் கண்காணிப்பு குழுக்களுக்கான ஆலோசனை கூட்டம் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலச்சந்தர் முன்னிலை வகித்தார். சேலம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் ராஜூவ் சங்கர் கிட்டூர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- வாகன சோதனையில் ஈடுபடும் போது அதற்கான பதிவேடு முறையாக கையாள வேண்டும். ஒவ்வொரு குழுவினரும் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும்.
பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையின் போது தேர்தல் விதிகளுக்கு முரணாக பணம், பொருள்கள் அனுமதியின்றி கொண்டு செல்லும் மதுபாட்டில்கள் போன்றவற்றை பதிவேட்டில் சரியாக குறிப்பிட வேண்டும். சோதனைச் சாவடிகளில் வாகன சோதனை செய்வதோடு மட்டுமல்லாமல், சோதனை செய்யும் தொகுதியில் ஒரே இடத்தில் நிலையாக இல்லாமல் அவ்வப்போது சோதனை செய்யும் இடங்களை மாற்றம் செய்ய வேண்டும்.
அவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட இடத்தை தகவல் மையத்திற்கு தெரிவிக்க வேண்டும். வேட்பாளர்கள் தேர்தல் நடத்தை விதியை பின்பற்றுகிறார்களா என்றும், நிர்ணயித்த தொகைக்கு உட்பட்டு செலவு செய்யப்படுகிறதா? என்பதையும் கண்காணித்து வீடியோ பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட ஒளிப்பட பதிவுகளை சம்மந்தப்பட்ட அலுவலர், கணக்கு குழுவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் உதவி ஆணையாளர்கள் வேடியப்பன், தமிழ்வேந்தன், துணை தாசில்தார் ஜாஸ்மீன் உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.