வாக்கு எண்ணும் பணியாளர்கள் சுழற்சி முறையில் தேர்வு:ஆட்சியர்

வாக்கு எண்ணும் பணியாளர்கள் சுழற்சி முறையில் தேர்வு:ஆட்சியர்

ஆலோசனை கூட்டம் 

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் / உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் முதற் கட்ட சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்களில் இன்று (17.05.2024) தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் / உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் ஆகியோர்கள் முதற் கட்ட சுழற்சி முறையில் (1st Randomization process) தேர்வு செய்யும் பணி தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி, தலைமையில் நடைபெற்றது.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர்தெரிவித்ததாவது: 36.தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையானது வருகின்ற 04-066-2024 அன்று நடைபெற உள்ளது. இவ்வாக்கு எண்ணிக்கையில், வாக்கு எண்ணிக்கைக்கான மேற்பார்வையாளர்கள்/உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் ஆகியோர்கள் மூன்று கட்டமாக சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணியாளர்களை தேர்வு செய்வதற்கான முதற்கட்ட சுழற்சி முறையானது தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் அவர்களால் வழங்கப்பட்ட மென்பொருளில் மேற்கொள்ளப்பட்டது.

இதில், கீழ்கண்ட விபரப்படி வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள்/ உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் ஆகியோர்கள் சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட 109 வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், 116 வாக்கு எண்ணிக்கை உதவியாளர்கள் மற்றும் 124 நுண் பார்வையாளர்கள் என மொத்தம் 349 வாக்கு எண்ணிக்கை பணியாளர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பானது, 23.05.2024 அன்று (வியாழக்கிழமை) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தனிதனியாக மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதன் பின்னர், தேர்தல் பொதுப் பார்வையாளர் வரப்பெற்ற பின்பு 2ம் கட்ட சுழற்சி முறையில் சட்டமன்றத் தொகுதிக்கு தேர்வு செய்வதற்கான பணியானது தேர்தல் பொது பார்வையாளர் முன்னிலையில் நடைபெறும். அப்போது 2ம் கட்ட பயிற்சியானது, தேர்தல் பொது பார்வையாளர் தலைமையில் வழங்கப்படும்.

மேலும், 3ம் கட்ட சுழற்சி முறை தேர்வானது, வாக்கு எண்ணிக்கை அன்று (04.06.2024) வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைத்து அன்று காலை 5.00 மணியளவில் தேர்தல் பொது பார்வையாளர் முன்னிலையில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் மேஜை வாரியாக தேர்வு செய்யப்படவுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ம.பிரபு (தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி), சுகுமாறன் (திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி), விக்னேஷ்வரன் (திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதி), கல்யாணசுந்தரம் (ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி), உஷா (விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜகுரு, தேர்தல் வட்டாட்சியர் தில்லைப்பாண்டி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story