சேலம் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு: 5,632 போலீசாருக்கு பணி ஒதுக்கீடு
போலீசாருக்கு பணி ஒதுக்கீடு
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் 1,275 வாக்குச்சாவடி அமைவிடங்களில் 3,260 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள பல்வேறு நிலை அலுவலர்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே சேலம் மாவட்டத்தில் 1,275 வாக்குச்சாவடி அமைவிடங்களில் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ள பல்வேறு நிலையிலான போலீசாருக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி தலைமை தாங்கினார். தேர்தல் பொது பார்வையாளர் ஜி.பி.பாட்டீல், போலீஸ் பார்வையாளர் உஷாராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேர்தல் பாதுகாப்பு பணிக்கென ஏற்கனவே மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் போலீசார், பிற மாநில போலீசார், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் என மாநகர பகுதிகளில் உள்ள 359 வாக்குச்சாவடி அமைவிடங்களுக்கு 2,223 பேர் ஊரக பகுதிகளில் உள்ள 916 வாக்குச்சாவடி அமைவிடங்களுக்கு 3,409 பேர் என மொத்தம் 5,632 போலீசாருக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் எண்ணிக்கை தேவைக்கேற்ப அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், துணை கமிஷனர்கள் பிருந்தா, மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.