தேர்தல் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி நாளை துவக்கம்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர்
நாமக்கல் மாவட்டத்தில், 7,816 தேர்தல் அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி, நாளை 24ம் தேதி 6 சட்டசபை தொகுதிகளில் நடைபெறுகிறது. இதில் அனைத்து அலுவலர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
நாமக்கல் மாவட்டத்தில், வருகிற ஏப்ரல் 19ம் தேதி நடைபெறு உள்ள, லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவிற்காக, 6 சட்டசபை தொகுதிகளில், 1,628 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடி மையங்களில், ஓட்டுச் சாவடிகளில் பணியாற்ற, ஒவ்வொரு ஓட்டுச்சாவடிகளிலும் தலா ஒரு முதன்மை அலுவலர், மூன்று நிலைகளிலான ஓட்டுச்சாவடி அலுவலர்கள் என, மொத்தம், 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ராசிபுரம் சட்டசபை தொகுதியில், 1,374 பேர், சேந்தமங்கலம் 1,192 பேர், நாமக்கல் 1,781 பேர், ப.வேலூர் 1,062 பேர், திருச்செங்கோடு 1,431 பேர், குமாரபாளையம் 976 பேர் என, மொத்தம் 7,816 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு 4 கட்ட பயிற்சி நடைபெற உள்ளது. முதல் கட்ட பயிற்சி நாளை 24ம் தேதி ராசிபுரம் SRV பெண்கள் மெட்ரிக் பள்ளி, சேந்தமங்கலம் வேதலோகா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பரமத்தி வேலூர் கொங்கு மெட்ரிக் பள்ளி, திருச்செங்கோடு KSR கல்லூரி, குமாரபாளையம் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. பயிற்சி நடக்கும் நாட்களில், பணியமர்த்தப்பட்ட அலுவலர்கள் அனைவரும் தவறாமல் பங்குகொண்டு, லோக்சபா தேர்தலை சிறப்பாகவும், அமைதியாகவும், பொதுமக்கள் சிரமமின்றி ஓட்டுப்போடும் வகையில் பணியாற்ற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.