தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி அறிவுறுத்தல் !
பிருந்தாதேவி
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் மண்டல அலுவலர்கள் வாக்குப்பதிவு சுமுகமாக நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி அறிவுறுத்தினார்.
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் மண்டல அலுவலர்கள் வாக்குப்பதிவு சுமுகமாக நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி அறிவுறுத்தினார். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் பணியாற்றும் மண்டல அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் பொது பார்வையாளர் ஜி.பி.பாட்டீல் முன்னிலை வகித்தார். மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிருந்தாதேவி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளில் 3 ஆயிரத்து 260 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் வருகிற 19-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்குச்சாவடி மையங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை தாசில்தார்கள் நிலையில் 172 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் ஆணைய வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிப்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டுள்ளன. சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குரிய வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள 8 ஆயிரத்து 782 பணியாளர்களுக்கும் இப்பயிற்சி வழங்கப்படும். குறித்த நேரத்தில் வாக்குப்பதிவு தொடங்க வேண்டும் என்று அனைத்து நிலை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு குடிநீர், கழிப்பறை வசதிகள், கோடை வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க தற்காலிக நிழற்பந்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதை அலுவலர்கள் முன்னதாகவே உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Next Story