மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்விளக்க மையங்கள் அமைப்பு
வாக்கு பதிவு இயந்திர செயல் விளக்கம்
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- இந்திய தேர்தல் ஆணையம் வருகிற நாடாளுமன்ற தேர்தலையொட்டி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் வாக்களிப்பது குறித்த பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திட அறிவுறுத்தியுள்ளது. மேலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பற்றிய செயல்விளக்க மையம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், ஒவ்வொரு சட்டசபை தொகுதியில் ஒரு இடத்திலும் அமைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சேலம் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் மற்றும் கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, சேலம் மேற்கு ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு அந்தந்த பகுதியில் உள்ள தாலுகா அலுவலகங்களிலும், சேலம் வடக்கு தொகுதிக்கு அஸ்தம்பட்டி மண்டல மாநகராட்சி உதவி ஆணையர் அலுவலகத்திலும், சேலம் தெற்கு தொகுதிக்கு கொண்டலாம்பட்டி மண்டல மாநகராட்சி உதவி ஆணையர் அலுவலகத்திலும், வீரபாண்டி தொகுதிக்கு சேலம் தெற்கு தாலுகா அலுவலகத்திலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் செயல்விளக்க மையங்கள் அமைக்கப்பட்டடுள்ளது. பொதுமக்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்களிப்பது குறித்து அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.