யானைகள் வழித்தட விவகாரம் - மதசார்பற்ற கட்சியினர் ஆட்சியரிடம் மனு

யானைகள் வழித்தட விவகாரம் - மதசார்பற்ற கட்சியினர் ஆட்சியரிடம் மனு

மனு அளிக்க வந்தவர்கள் 

யானைகள் வழித்தட விரிவாக்கம் குறித்து வனத்துறையினர்‌ வெளியிட்ட உத்தரவை அரசு உடனே திரும்ப பெற்று கூடலூர்‌ தொகுதி மக்களை பாதுகாக்க தமிழக அரசு அவசரமாக முன்வர வேண்டும் என மதசார்பற்ற கட்சியினர் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

யானைகள் வழித்தட விரிவாக்க நடவடிக்கை எதிர்ப்பு குழு சார்பில் தி.மு.க., கூடலூர் நகர செயலாளர் இளஞ்செழியன், கோபிநாத் (காங்கிரஸ்), என்.வாசு (மா.கம்யூ), சகாதேவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), கே.ஹனீபா (முஸ்லீம் லீக்) மற்றும் பலர் யானைகள் வழித்தட பிரச்சினை குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- நீலகிரி மாவட்டம்‌ கூடலூர்‌ சட்டப்பேரவைத் தொகுதியில்‌ சாதாரண மக்களின்‌ அன்றாட வாழ்க்கை தனியார்‌ வனபாதுகாப்பு சட்டம்‌, வீடுகளுக்கு மின்‌ இணைப்பு இல்லாத பிரச்னை, வளர்ச்சிபணிகள்‌ மேற்கொள்ள முடியாத நிலை ஆகிய பிரச்னைகள்‌ சாதாரண மக்களின்‌ அன்றாட வாழ்கைக்கு பெரிய அளவு பாதிப்பாக உள்ளது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள யானைகள்‌ வழித்தட விரிவாக்கம்‌ கூடலூர்‌, ஓவேலி முதுமலை ஆகிய வனத்துறை சரக அலுவலகங்களுக்கு‌ உட்பட்ட 31 கிராமங்களில்‌ 2547 வீடுகள், இந்த அறிவிப்பால்‌ பாதிக்கும்‌ அபாயம்‌ உள்ளது. 7- வருவாய்‌ கிராமங்களில்‌ 34796 வீடுகள்‌ யானை வழித்தடத்தில்‌ உள்ளதாக கண்டிறியப்பட்டுள்ளது. இதில்‌ 2547 வீடுகள்‌ ஒவேலி பேரூராட்சியில்‌ உள்ளன. சுமார்‌ ஒரு லட்சம்‌ மக்கள்‌ இதனால்‌ பாதிக்கப்படுவார்கள். நெலாக்கோட்டை, சேரங்கோடு, நெல்லியாளம்‌ நகராட்சி பகுதி, மசினகுடி ஆகிய உள்ளாட்சி பகுதிகளில்‌ உள்ள மக்கள் பெரிதும்‌ பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்‌ கடந்த மாதம் 29ம் தேதி வனத்துறையினரால்‌ யானைகள்‌ வழித்தட விரிவாக்கம் குறித்து புதியதாக ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்‌ மீது ஏதாவது கருத்து கூறுவது என்றால்‌ 5ம் தேதிக்குள்‌ மின்‌ அஞ்சல்‌ மூலம்‌ அறிவிக்க வேண்டும்‌ என்றும்‌ கூறப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில்‌ உள்ள இந்த உத்தரவு கூடலூர் சட்டப்பேரவை தொகுதியில்‌ உள்ள ஆங்கிலம்‌ தெரியாத, மின்‌ இணைப்பு இல்லாத வீடுகளில்‌ குடியிருக்கும்‌ கூலி தொழிலாளர்களுக்கு தெரியவாய்ப்பில்லை. ஆகவே யாரும்‌ கருத்து கூறியிருக்க வாய்ப்பில்லை.

தேர்தல்‌ அறிவித்த காலகட்டத்தில்‌ எந்த அரசு அலுவலகமும்‌ செயல்படாத நிலையில்‌ வனத்துறை அதிகாரிகள்‌ எப்படி இது போன்ற ஒரு உத்தரவை வெளியிட்டு கருத்து கேட்க முடியும்‌ என்பதும்‌ புரிய முடியவில்லை. ஆகவே வனத்துறையினரால்‌ யானை வழித்தடம் விரிவாக்கம்‌ சம்பந்தமான ஏப்ரல் 29ம் தேதியிட்ட உத்தரவை ரத்து செய்து, மக்களின்‌ குழு கருத்து கேட்ட பிறகு தான் அமுலாக்குவது பற்றி முடிவு எடுக்க வேண்டும்‌‌. அனைத்து பொதுமக்களும்‌ பெரும்‌ அச்சத்தில்‌, பயந்து போய்‌ உள்ளனர்‌. இந்நிலையில்‌ நம்பிக்கை இழந்த மக்களை பாதுகாக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது. ஆகவே, இந்த யானைகள்‌ வழித்தட விரிவாக்கம்‌ பற்றிய 29ம் தேதியிட்ட வனத்துறையினர்‌ வெளியிட்ட உத்தரவை அரசு உடனே திரும்ப பெற்று கூடலூர்‌ தொகுதி மக்களை பாதுகாக்க தமிழக அரசு அவசரமாக முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Next Story