தகுதியான சத்துணவு மையங்கள் - சிவகங்கையில் 3 பள்ளிகளுக்கு தரச்சான்று
பள்ளிகளுக்கு தர சான்று
கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், தமிழகம் முழுவதும் தகுதியான 100 பள்ளி சத்துணவு மையங்கள் தேர்வு செய்து, ISO 9001-2015 தரச்சான்று வழங்கிட அரசால் அறிவுறுத்தப்பட்டு, அதற்கான ஆய்வுப்பணிகள், தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட M/S Quest Certification Ltd.., Chennai என்ற நிறுவனத்தின் தணிக்கை குழுவின் சார்பில் முதன்மை ஆய்வு அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் மேற்கண்ட நிறுவனத்தின் வாயிலாக பள்ளி சத்துணவு மையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதன்படி, சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், அண்ணாநகர் பகுதியிலுள்ள ஒ.புதூர் நடுநிலைப்பள்ளி, மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், மிளகனூர் பகுதியிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், திருப்புவனம் பகுதியிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று சத்துணவு மையங்களும் தகுதியான மையங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட மூன்று மையங்களுக்கு ISO 9001-2015 தரசான்றிதழினை அந்நிறுவனத்தின் வாயிலாக சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகளிடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.