100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி வீணை வாசித்து விழிப்புணர்வு
சேலத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி பெண் தேர்தல் அதிகாரி வீணை வாசித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
சேலம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவை அதிகரிக்க செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், விழிப்புணர்வையும் செய்து வருகின்றனர். கிராமங்களில் விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டும், நகரங்கள், கல்லூரிகளில் கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 100 சதவீதம் வாக்குபதிவை வலியுறுத்தி, ஓமலூர் அருகே உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், பரத நாட்டியம், பாடல்கள், இசை கருவிகள் இசைத்தல், வீணை வாசித்தல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து தேர்தல் நடத்தும் உதவி தேர்தல் அலுவலர் லட்சுமி, மாணவிகள் முன்னிலையில் வீணை வாசித்து 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும், தேர்தல் அலுவலர் லட்சுமி சுமார் அரை மணி நேரம் வீணை வாசித்து அசத்தினார். இவரை தொடர்ந்து சேலம் இசை பள்ளி மாணவிகள் வீணை வாசித்தும் பாடல்கள் பாடியும் மாணவிகள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் . புதிய வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் தங்களது ஜனநாயக கடமையை செய்ய வலியுறுத்தினர்.