ஊழியர்கள் மறியல் போராட்டம் : 526 பேர் கைது
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 526 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தஞ்சாவூர் ஆற்றுப்பாலத்தில் செவ்வாய்க்கிழமை ஜாக்டோ- ஜியோ அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இளையராஜா, பன்னீர்செல்வம், சத்தியசீலன், ரங்கசாமி ஆகியோர் தலைமையில் திரண்டனர். இதில், அரசு ஊழியர் சங்கம் மாநிலச் செயலாளர் எஸ்.கோதண்டபாணி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக மீண்டும் அமல்படுத்த வேண்டும். அரசு அலுவலங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை வழங்கிட வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், தொகுப்பூதியம் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் எம்.ஆர்.பி செவிலியர்கள், சிறப்பாசிரியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து ஆற்றுப்பாலம் காந்திஜி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 526 பேரை மேற்கு காவல்நிலையத்தினர் கைது செய்தனர்.