‘என் கல்லூரிக் கனவு’ உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

நாமக்கல்லில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ‘என் கல்லூரிக் கனவு’ உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ‘என் கல்லூரிக் கனவு’ மற்றும் உயர்கல்வி தொடர்பான வழிகாட்டும் கருத்தரங்கு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது.அந்த வகையில், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அரசு மகளிர் கல்லூரியில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் வெ.முருகன் தலைமை வகித்தார். பழங்குடியினர் நலன் திட்ட அலுவலர் பீட்டர் ஞானராஜ், ஆதிதிராவிடர் நலன் தனி வட்டாட்சியர் பிரகாஷ்,மாவட்ட முதன்மை கல்வி அலுவலக ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரி, கண்காணிப்பாளர் சத்யா, திட்ட ஆலோசகர் ராஜாஜெகஜீவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்வி வழிகாட்டி பயிற்சியாளர் சு.மதி, தொன்போஸ்கோ அன்பு இல்ல இயக்குநர் மோ.கஸ்மீர்ஜார்ஜ் ஆகியோர் உயர்கல்விக்கான வழகாட்டும் தகவல்களை மாணவர்களிடையே பகிர்ந்து கொண்டனர். பிளஸ் 2 முடித்த பிறகு என்ன படிக்கலாம், கனவுகளை நனவாக்கும் படிப்பு, உதவித்தொகை வாய்ப்புகள், உயர்கல்வி வழகாட்டுதல்கள், எந்த கல்லூரியில் என்ன படிக்கலாம் என்பது போன்ற தகவல்களை விளக்கி கூறினர்.மேல்நிலைப் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் தங்களின் எதிர்கால கனவினை நனவாக்கும் வகையில் அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதையும், கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதையும், மேற்படிப்பினை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் போன்ற விவரங்கள், புகழ்பெற்ற வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. பிளஸ் டூ-வுக்கு பிறகு படிக்க வேண்டிய பாடப்பிரிவுகள், கல்விக் கடன்கள், வேலைவாய்ப்புகள், பற்றிய தகவல்கள் விளக்கப்பட்டன.

மேலும் மேல்நிலை கல்வி படித்து முடிக்கும் மாணவ மாணவிகளுக்கு மத்திய மாநில அரசுகள் வழங்கும் கல்வி உதவித் தொகைகள், இட ஒதுக்கீடு, NEET, JEE, UPSC, TNPSC போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள் பெறும் வழிமுறைகள், மாணவர்கள் தங்கள் எதிர்பார்ப்புகளை தெரிவிக்கும் ஒரு பின்னூட்ட அமர்வும் இடம்பெற்றது. மேலும் இந்த உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி 3 பகுதிகளாக நடத்தப்படும், என் கல்லூரி கனவு நிகழ்ச்சி, அடுத்ததாக பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகு ஒன்றும், ஜூன் மாதத்தில் ஒன்றும் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.இத்தகைய நிகழ்ச்சிகள் மாணவர்களின் எதிர்கால குறிக்கோளை திட்டமிட்டு அடையவும், வெற்றி பெறவும் வழிவகை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கருத்தரங்கில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story