மின்சாரம், குடிநீரை வீணடிக்கும் ஏனாத்துார் ஊராட்சி நிர்வாகம்
ஏனாத்துாரில் ஊராட்சியில் நிர்வாகத்தின் அலட்சியத்தால் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி நிரம்பி வீணாகி வழிவதால் குடிநீர் மட்டுமின்றி மின்சாரமும் வீணாகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏனாத்துார் ஊராட்சியில், 5,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவ்வூராட்சி நிர்வாகம் தெரு மின்விளக்கு மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை முறையாக பராமரிக்காததால், குடிநீரையும், மின்சாரத்தையும் வீணடிப்பதாக புகார் எழுந்துள்ளது. ஏனாத்துார் பிரதான சாலை மற்றும் நல்லுார் செல்லும் சாலையில், இரவு, பகல் என, 24 மணி நேரமும் பல மாதங்களாக தெருமின்விளக்குகள் ஒளிர்கின்றன. இதனால், மின்சாரம் விரயமாவதுடன், மின்விளக்குகளும் விரைவில் பழுதாகும் சூழல் உள்ளது.
இதனால், மின்வாரியத்திற்கு மின் கட்டணமும் அதிகளவு செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால், ஊராட்சி நிதியில் இருந்து, மின்கட்டணத்திற்கு என, குறிப்பிட்ட தொகை கூடுதலாக செலுத்துவதாக புகார் எழுந்துள்ளது. அதேபோல, ஊராட்சிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர்., நகரில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீர் நிரப்பும்போது முறையாக பராமரிக்காததால், தொட்டி முழுமையாக நிரம்பி பல மணி நேரம் குடிநீர் வீணாகி வருகிறது.
மேலும், ஏனாத்துார் பிரதான சாலையில், தெருக்குழாயில் உடைப்பு ஏற்பட்டு, இரு நாட்களாக சாலையில் குடிநீர் வழிந்தோடுகிறது. கோடைக்காலத்தில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஏனாத்துார் ஊராட்சியில் கிடைக்கும் தண்ணீரை முறையாக பயன்படுத்தாமல் வீணடிப்பதாக அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரப்பும் பணியையும், தெருமின்விளக்கையும் ஏனாத்துார் ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்."