தனியார் வாகனங்களின் ஆக்கிரமிப்பு பஸ் நிலையத்தில் அவதி
தனியார் வாகனங்களின் ஆக்கிரமிப்பு பஸ் நிலையத்தில் அவதி
சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையோரம் பூந்தமல்லி நகராட்சி அமைந்துள்ளது. இதனால், பூந்தமல்லி, சென்னையின் நுழைவு பகுதியாக உள்ளது. பூந்தமல்லி பேருந்து நிலையத்தை பயன்படுத்தி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த பேருந்து நிலையம் பராமரிப்பு படுமோசமாக உள்ளது. இலவச கழிவறைகள் சுத்தமாக இல்லாததால், துர்நாற்றம் வீசுகிறது.
இதனால், பேருந்து நிலையத்தின் திறந்த வெளியில் பயணியர் இயற்கை உபாதைகள் கழிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தின் உள்ளே பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் உள்ளன. நிலையம் வளாகம் முழுவதும் குப்பைகளாகவும், சுவரொட்டி விளம்பரமாக அலங்கோலமாக உள்ளது. மேலும், பேருந்து நிலையம் அருகில் உள்ள நீதிமன்றம், சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு செல்வோர் தங்களது கார்கள், மோட்டார் சைக்கிள்களை நிலையத்தின் உள்ளே ஆக்கிரமித்து நிறுத்துகின்றனர்.
இதனால், பயணியர் அவதிப்படுகின்றனர். ஓட்டுனர்கள் பேருந்துகளை நிறுத்தவும், திருப்பவும் இடமில்லாமல் அவதிக்குள்ளாகின்றனர். பூந்தமல்லி நகராட்சி நிர்வாகத்தினர் பேருந்து நிலையத்தை முறையாக பராமரித்து தனியார் வாகனங்களை நிலையத்தின் உள்ளே 'பார்கிங்' செய்ய தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.