காஞ்சிபுரத்தில் சாலையோரம் நடப்படும் வெளிநாட்டு மரங்கள்
சாலையோரத்தில் உள்ள வெளிநாட்டு மரங்கள்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இரு மாவட்டங்களிலும், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாவட்ட சாலை, இதர சாலை என, மொத்தம், 2,253 கி.மீ., துார சாலைகள் உள்ளன. இதுதவிர, 1,292 கி.மீ., ஒன்றிய சாலைகள், 1,694 கி.மீ., துாரம் ஊராட்சி சாலைகள் என, மொத்தம் 5,239 கி.மீ., துார சாலைகள் உள்ளன. இ
தில், பள்ளூர் - சோகண்டி சாலை; சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை; காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலை என, பல்வேறு சாலைகள் ஓரமாக வருவாய் மற்றும் நிழல் தரும் புளியமரங்கள் இருந்தன. சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தட சாலை விரிவாக்கத்திற்கு, 1,000த்துக்கும் மேற்பட்ட மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.
இதுதவிர, வாலாஜாபாத் - வண்டலுார் சாலை மற்றும் வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் - கீழச்சேரி ஆகிய சாலைகள் ஓரம் இருந்த மரங்களும் அகற்றப்பட்டுள்ளன. இதற்கு, பதிலாக நெடுஞ்சாலை துறையினர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையினர், ஒரு மரத்திற்கு, 10 மரங்கள் வீதம் மரக்கன்றுகளை நட்டுள்ளனர். அந்த வகையில், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - திருத்தணி வரையில் 10,000 மரக்கன்றுகள். வாலாஜாபாத் - வண்டலுார் சாலையில், 7,000 மரக்கன்றுகள் என, 25,000 மேற்பட்ட மரங்கள் நடப்பட்டுள்ளன. தற்போது, சாலை ஓரம் நடப்படும், அமெரிக்கா,
கனடா, தென் ஆப்ரிக்கா நாட்டைச் சேர்ந்த மரங்கள், அதிக வெப்பத்தை வெளியேற்றும் மரங்களாக உள்ளன. குறிப்பாக, கோனோ கார்பஸ், டபிபியா, சீமை வேலிகாத்தான் ஆகிய மரங்கள் தான் உள்ளன. இந்த மரங்கள் அதிக வெப்பத்தை உமிழும் தன்மை உடையன. இதனால், பிரதான சாலை ஓரங்களில், வாகன ஓட்டிகள் செல்லும் போது, அதிக வெப்பத்தை உணர முடிகிறது. கோடை காலங்களில், மரத்தடியில் நிழலுக்கு நின்று ஓய்வு எடுக்க முடியாத சூழல் உள்ளது.
இதை தவிர்க்க சாலை ஓரங்களில் நிழல் தரும் மரங்கள் மற்றும் வருவாய் தரும் மரங்கள் நடவேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. பசுமை ஆர்வலர் எழில்சோலை மரம் மாசிலாமணி கூறியதாவது: சாலை ஓரங்களில் நடப்படும் மரங்கள், பிற நாட்டைச் சேர்ந்த மரங்களாக உள்ளன. இது, வெயில் காலங்களில் அதிக வெப்பத்தை வெளியேற்றும். சாலையில் செல்லும் மனிதர்கள் மட்டுமல்லாமது பறவையினங்களும் பாதிக்கப்படுகின்றன. இதை தவிர்க்க, சாலை ஓரங்களில் நாவல், புளியன், மகிழம், மந்தாரை, சாரக்கொன்றை, தான்றிக்காய், பாதாம், வெண் கடம்பம், கருமருது, மஞ்சள் கடம்பம், பூ மருது, புங்கன், வேம்பு, நீர் மருது ஆகிய மரங்களை நட வேண்டும். இது தொடர்பாக, கலெக்டரிடம் முறையாக மனு அளித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.