மயானத்துக்கு போகும் பாதை ஆக்கிரமிப்பு: மக்கள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலத்தில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது வரவணி என்னும் கிராமம். இங்குள்ள ஆதிதிராவிடர் காலணியில் சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக இடம் கையகப்படுத்தி அரசு சார்பில் இலவசமாக காலணி வீடுகள் கட்டிக் கொடுக்கப் பட்டது. அதன் பிறகு சேதமடைந்த வீடுகளை இடித்து விட்டு பராமரிப்பு செய்தும், புதிதாக வீடுகள் கட்டியும் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர்.

இந்த காலணி மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி பரிதவித்து வருகின்றனர். இங்குள்ளவர்கள் இறந்தால் உடலை அடக்கம் செய்வதற்கு ஊருக்கு ஒதுக்குப்புறமாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மயானம் உள்ளது. அந்த மயானத்திற்கு செல்ல அரசால் ஒதுக்கப்பட்ட பாதையை திமுக ஒன்றிய கவுன்சிலர் ராஜீவ் காந்தி மற்றும் வரவணி திமுக ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் ஆகியோரின் துணையோடு பலர் ஆக்கிரமித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் சுமார் 20 அடி அகலம் உள்ள பாதை தற்போது பல இடங்களில் 5 அடியை விட குறைவான அகலத்தில் சுருங்கியுள்ளது.

இதனால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய கொண்டு செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. பல நேரங்களில் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்லும் பொழுது ஆக்கிரமிப்பு செய்தவர்கள் தகராறு செய்வதால் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உதவியோடு அடக்கம் செய்ய உடலை கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குடியிருப்பில் மழைக்காலங்களில் யாரேனும் இறக்க நேர்ந்தால் அவர்களின் உடலை தூக்கிச் சென்று அடக்கம் செய்வதில் தொடர்ந்து சிரமம் ஏற்பட்டு வருவதாகவும் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வகையில் ஆக்கிரமிப்பை அகற்றி மயானத்திற்கு செல்வதற்கு சாலை அமைத்து தர வேண்டும் என்றும் குடியிருப்பு பகுதியில் மத்தியில் உள்ள காலியான இடத்தில் சமுதாய கூடம் கட்டித் தர வேண்டும். கூடுதலாக குடிநீர் குழாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவே மயானத்திற்கு உடலைக் கொண்டு செல்ல பாதையின் ஆக்கிரமிப்பை அகற்றி முறையான சாலை அமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் திரணற்ற விடியா அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story