ஆக்கிரமிப்பு ஓடையை மீட்க வேண்டும் - கவுன்சிலர்கள் கோரிக்கை

ஆக்கிரமிப்பு ஓடையை மீட்க வேண்டும்  - கவுன்சிலர்கள் கோரிக்கை

 ஒன்றிய குழு கூட்டம் 

அருப்புக்கோட்டையில் பாராளுமன்ற தேர்தலுக்குப் பின் நடைபெற்ற ஒன்றிய கவுன்சிலர் கூட்டத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள ஓடையை மீட்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கவுன்சிலர்கள் முன்வைத்தனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் சசிகலா பொன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. சுமார் மூன்று மாதங்களுக்கு பின் நடைபெற்ற இந்த ஒன்றிய கவுன்சிலர் கூட்டத்தில்‌ பங்கேற்ற ஒன்றிய கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

அதன்படி பாளையம்பட்டியைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் கோவிந்த சாமிநாதன் பேசுகையில், பாளையம்பட்டியில் உள்ள அரசு மில் அருகே உள்ள ஓடை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், டிஎஸ்பி அலுவலகம் முன்பு ஹைமாஸ் விளக்குகள் பொருத்த வேண்டும் எனவும், கொத்தனார் காலணியில் இ சேவை மையம் கட்டி முடிக்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது அதை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் பேசினார்.‌

அதே போல சுக்கிலநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் வாழவந்தராஜ் பேசுகையில், இருக்கன்குடி சாலையில் நகராட்சி குப்பை கிடங்கு அருகே தனியார் இடத்தில் சிலர் சாம்பல் கழிவுகளை இந்த சாம்பல் கழிவுகள் மூடப்படாமல் உள்ளதால் காற்றில் பறந்து இரு சக்கர வாகன ஓட்டிகள் முகத்தில் விழுந்து சில சமயங்களில் விபத்து ஏற்பட்டு விடுகிறது.‌ இப்பகுதியில் சாம்பல் கழிவுகள் கொட்டாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், சுக்கிலநத்தம் ஊராட்சியை சுற்றி உள்ள தனியார் பள்ளிகள், ஹோட்டல்கள் நோட்டீஸ் அனுப்பியும் ஊராட்சிக்கு வரி செலுத்துவது கிடையாது அதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், சுக்கிலநத்தம் கிராமத்தில் உள்ள சேதமடைந்து கிடக்கும் அரசு கட்டிடங்களை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பேசினார்.

அதேபோல மற்ற கவுன்சிலர்கள் தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர்.‌ உரிய நடவடிக்கை எடுப்பதாக ஒன்றிய பெருந்தலைவர் சசிகலா பொன்ராஜ் உறுதி அளித்தார். இவ்வாறு ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.

Tags

Read MoreRead Less
Next Story