நிழற்குடைப் பகுதியில் ஆக்கிரமிப்புகள், பயணிகள் அவதி
மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையம் நிழற்குடைப் பகுதியில் ஆக்கிரமிப்புகளால் பயணிகள் அவதியடைகின்றனர்.
மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து, 40 தனியார் பேருந்துகள், 100க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆயிரக்கணக்கான மக்கள் இப்பேருந்து நிலையத்தை பயன்படுத்துகின்றனர். அண்ணா பேருந்து நிலையம் இடித்து அகற்றப்பட்டு, புதிதாக 2.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
இதனால், மதுராந்தகம் வடக்கு பைபாஸ் சாலையில், தற்காலிகமாக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து, 1 கி.மீ., துாரம் டவுன் பகுதிக்கு நடந்து செல்லும் பயணியர், பஜாரில் பொருட்களை வாங்கி கொண்டு, மீண்டும் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு வருகின்றனர். பஜாரில் இருந்து தேரடி தெரு வழியாக வந்து, ஜி.எஸ்.டி., சாலையை கடந்து, தற்காலிக பேருந்து நிலையத்திற்கு செல்கின்றனர். இதில், ஜி.எஸ்.டி., சாலையில், மதுராந்தகம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், 2006 -- 7ல், இரும்பு துாண்கள் அமைத்து, ஓடுகளால் வேயப்பட்ட, இரண்டு பயணியர் நிழற்குடைகள் கட்டப்பட்டன. இந்த இரண்டு நிழற்குடை பகுதியிலும், தற்போது கடைகள் அமைத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
மேலும், அருகிலுள்ள தேநீர் கடைகள் மற்றும் உணவகங்களுக்கு இருசக்கர வாகனங்களில் செல்வோர், வாகனங்களை நிழற்குடையில் நிறுத்தி ஆக்கிரமித்து வருகின்றனர். செய்யூர், பவுஞ்சூர், சூணாம்பேடு, சித்தாமூர், அச்சிறுபாக்கம், ஒரத்தி போன்ற பகுதிகளுக்கு செல்லும் பயணியர், நிழற்குடை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், வெயிலில் நின்று, பேருந்துக்காக காத்திருந்து, பயணம் செய்து வருகின்றனர். நிழற்குடை பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் தாய்மார்கள் உட்கார இடம் இல்லாமல், கால் கடுக்க வெயிலில் காத்திருக்கின்றனர். எனவே, துறை சார்ந்த அதிகாரிகள், நிழற்குடை பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கடைகளை அப்புறப்படுத்தி, மீண்டும் பயணியரின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.