தேர்தல் நடத்தை விதிமுறை அமல் - மக்கள் பிரதிநிதிகள் அலுவலகங்களுக்கு சீல்

தேர்தல் நடத்தை விதிமுறை அமல் - மக்கள் பிரதிநிதிகள் அலுவலகங்களுக்கு சீல்

சீல் வைக்கும் பணியில் அலுவலர்கள் 

தேர்தல் நடத்தை விதிமுறை அமல்படுத்தப்பட்டதால் சேலம் மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள், மேயர், துணை மேயர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளின் அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையொட்டி கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவின் பேரில் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இதைத்தொடர்ந்து சேலம் 4 ரோடு, அழகாபுரம், தொங்கும் பூங்கா, அஸ்தம்பட்டி, அன்னதானப்பட்டி, அம்மாபேட்டை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் சாலையோரம் உள்ள சுவர்களில் எழுதப்பட்டு இருந்த அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதேபோன்று மாவட்டத்திலும் சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சிகளின் விளம்பர பதாகைகளும் அகற்றும் பணி நடக்கிறது. மாவட்டம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் திரைச்சீலைகள் மூலம் மூடப்பட்டு உள்ளன. இதேபோன்று அஸ்தம்பட்டி, பழைய பஸ் நிலையம் அருகே உள்ள எம்.எல்.ஏ. அலுவலகங்களை வருவாய்த்துறை அலுவலர்கள் மூலம் பூட்டி சீல் வைத்தனர்.

தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டன. பின்னர் அலுவலக சாவிகள் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. அதே போன்று சேலம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மாநகராட்சி மேயர், துணை மேயர் அலுவலகங்களும் பூட்டி சீல் வைக்கப்பட்டன. மேலும் அவர்கள் பயன்படுத்தி வந்த அரசு கார் சாவிகளும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

Tags

Next Story