அமலாக்கத்துறை அதிகாரி லஞ்ச வழக்கு-75 அதிகாரிகள் பட்டியல் பறிமுதல்

அமலாக்கத்துறை அதிகாரி லஞ்ச வழக்கு-75 அதிகாரிகள் பட்டியல் பறிமுதல்

அமலாக்கத்துறை அதிகாரி லஞ்ச வழக்கு-75 அதிகாரிகள் பட்டியல் பறிமுதல்

அமலாக்கத்துறை அதிகாரி லஞ்ச வழக்கு தொடர்பாக 75 அதிகாரிகள் பட்டியல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதில் 35 மூத்த அதிகாரிகளுக்கு தொடர்பு: பணம் வசூலிக்க வேண்டிய 75 பேர் பட்டியல் பறிமுதல்; ஜாமீன் வழங்க தமிழக அரசு எதிர்ப்பு அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதில் 35 மூத்த அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது.வசூலிக்கவேண்டிய 75 பேர் பட்டியல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

எனவே, அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. திண்டுக்கல் அரசு டாக்டரிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கி கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தனக்கு ஜாமீன் வழங்க கோரி , ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனு நீதிபதி வீ.சிவஞானம் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் அஜ்மல்கான் ஆஜராகி, ''மனுதாரர் மீது வேறு எந்த வழக்கும் இல்லை. போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்.

மேலும் ஒத்துழைக்க தயாராக உள்ளார். வேண்டுமென்றே இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே சிறையில் இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும்'' என்றார். தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகம்மது ஜின்னா, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.எம்.எஸ்.சேதுராமன் ஆகியோர் ஆஜராகி, ''போதுமான ஆதாரங்களின் அடிப்படையில் கையும், களவுமாகத்தான் மனுதாரர் பிடிபட்டார். சம்பவத்தின்போது ரூ.20 லட்சமும், அதன் பிறகு ரூ.20 லட்சமும் திவாரியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பணம் வாங்கியபோது டாக்டரின் காரில் இருந்த சிசிடிவி கேமரா மூலம் நடந்த சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது. பணம் கேட்டது தொடர்பான வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் ஆடியோ உரையாடல் பதிவுகள் உள்ளன. இந்த வழக்கில் இவர் மட்டுமின்றி 35க்கும் மேற்பட்ட மூத்த உயரதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது. லஞ்சம் மற்றும் நிதி முறைகேடு புகார் உள்ளவர்களை தொடர்பு கொண்டு பணம் பறிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அமலாக்கத்துறை மதுரை மண்டல அலுவலக பீரோவில் இருந்து டாக்டர் மீதான புகார் குறித்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் அங்கிருந்த கணினியில் அடுத்தகட்டமாக பணம் வசூலிக்க வேண்டிய 75க்கும் மேற்பட்டோரின் பட்டியல் உள்ளிட்ட விபரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட செல்போன், லேப்டாப் மற்றும் ஆவணங்களை முறையாக அறிவியல் பூர்வ தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆடியோ உரையாடல்களையும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரி கைது மற்றும் அலுவலக சோதனை அனைத்தும் முறையாகவே நடந்துள்ளது.

சம்பவத்தன்று நள்ளிரவு முதல் காலை 6 மணி வரை மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தின் வெளியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் காத்திருந்தனர். முறையாக அனுமதிக்கு பிறகே அலுவலகத்திற்குள் சென்று சோதனையிடப்பட்டது. இதற்கான ஆவணங்களில் பணியிலிருந்த துணை இயக்குநர் கையெழுத்திட்டு வழங்கியுள்ளார். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனுவை விசாரித்த அமர்வு, தள்ளுபடி செய்துள்ளது. லஞ்ச புகார் உள்ள பலரிடம் இதுபோல பணம் வசூலித்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார். லஞ்ச வழக்கில் கைதானவர் மீது இதுவரை எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை. லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அமலாக்கத்துறை தரப்பில் இருந்து டிஜிபிக்கு எந்த புகாரும் இதுவரை வரவில்லை. இதுதொடர்பான செய்திகள் மூலமே தெரியவந்தது. அதே நேரம் நினைவுபடுத்தும் கடிதம் மட்டுமே பெறப்பட்டுள்ளது. பல உயரதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதால், மனுதாரரை பாதுகாக்கும் நோக்கத்தில் இதுபோன்ற செயல்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இவருக்கு ஜாமீன் வழங்கினால், வெளியில் சென்றதும் சாட்சிகளை மிரட்டவும், ஆவணங்களை அழிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, ஜாமீன் வழங்கக் கூடாது'' என்றனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜாமீன் கோரிய மனுவின் மீது இன்று உரிய உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறி தள்ளி வைத்தார்.

Tags

Next Story