நகராட்சி கூட்டத்தில் பொறியாளர் வெளியேற்றம்

நகராட்சி கூட்டத்தில் பொறியாளர் வெளியேற்றம்

நகராட்சி கூட்டம்

நகராட்சி கூட்டத்தில் இருந்து பொறியாளர் திடீரென வெளியேறியதை கண்டித்து உறுப்பினர்கள் அனைவரும் தீர்மானங்களை நிறைவேற்றாமல் கூட்டத்தை புறக்கணித்தனர்.

விருதுநகர் நகராட்சியின் சாதாரண மற்றும் அவசர கூட்டம் நகர்மன்றத் தலைவர் ஆர்.மாதவன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் விடுப்பில் சென்றதால், பொறியாளர் எட்வின் பிரைட்ஜோஸ் முன்னிலையில் நடைபெற்றது .

கூட்டத்தில் 15 நாட்களாகியும் குடிநீர் வரவில்லையென உறுப்பினர்கள் முத்துராமன், ஜெயக்குமார், மதியழகன் உள்ளிட்ட உறுப்பினர்கள் எழுந்து நின்று புகார் தெரிவித்தனர்.

அப்போது பேசிய தலைவர், ஆனைக்குட்டம் பிரதான குடிநீர் குழாயில் அடுத்தடுத்து உடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் குடிநீர் விநியேகாம் பாதித்துள்ளது. இதை சீர் செய்ய ஒரு வாரம் வரை ஆகும் என்றார். இதையடுத்து, உறுப்பினர் ராஜ்குமார், “மிகவும் மோசமாக வேலை செய்து பொது மக்களை அவதிக்கு உள்ளாக்கும் குடிநீர் வடிகால் வாரியத்தின் மீது நடவடிக்கை எடு“ என்ற பதாகையுடன் தலைவர் முன் அமர்ந்தார்.

அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் அங்கு சென்றனர். அதன் பின்பு பேசிய தலைவர், குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தாமிரபரணி குடிநீர் திட்டப் பணிகள் சரிவர நடப்பதில்லை. இருந்த போதும், முத்துராமன்பட்டி ரயில்வே கிராசிங்கில் மற்றும் கருமாதி மடம் பகுதியில் குழாய் பதிக்கும் பணிகள் உள்ளன. எனவே, ஒரு மாத காலம் வரை அவகாசம் தரலாம். அதற்கு பின்பும் பணிகளை விரைவாக செய்யவில்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார் .

இதற்கு அனைத்து உறுப்பினர்களும் சம்மதம் தெரிவித்தனர். இந்நிலையில், ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் டென்டர் விடுவதற்கு 3 வருடம் ஆகி விடும் என பொறியாளர் தெரிவித்தார். அப்போது பேசிய உறுப்பினர் தலைவர் கூறிய கருத்தை ஏற்கிறோம். ஆனால், பொறியாளர் எப்படி 3 வருடம் ஆகும் என கூறலாம் என்றார்.

இதனால், ஆத்திரமடைந்த பொறியாளர் கூட்டத்தை விட்டு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து உதவி பொறியாளர்கள் இருவரும் கூட்ட அறையை விட்டு வெளியேறினர். இதையடுத்து பேசிய உறுப்பினர்கள், ஏற்கனவே இக்கூட்டத்தில் ஆணையாளர் இல்லை. நகர்மன்ற கூட்டத்தை அவமதித்து பாதியிலேயே பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர்கள் வெளியேறி விட்டனர். நகர்மன்ற உறுப்பினர்கள் கூறும் குறைகள் மீது யார் நடவடிக்கை எடுப்பார்கள்? எனக் கூறி அனைவரும் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர். இதனால் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. இதனையடுத்து, கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

Tags

Next Story