ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் எண்ணெய் காப்பு உற்சவம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் மார்கழி நீராட்டு உற்சவமான எண்ணைக் காப்பு உற்சவம் ஒவ்வொரு வருடமும் நடைபெறுவது வழக்கம். ஸ்ரீ ஆண்டாள் நோன்பு நோற்று பூமாலை சூடி பின் பாமாலை பாடி இறைவனை அடைந்தார். ஸ்ரீஆண்டாள் நோன்பு நோற்ற காலமான இந்த மார்கழி மாதத்தில் 8 நாட்கள் நடைபெறும் இந்த எட்டு நாட்களும் ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளம் அருகே உள்ள எண்ணை காப்பு உற்சவம் மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.
இந்நிலையில் இந்த வருடத்திற்கான எண்ணெய் காப்பு உற்சவம் நடைபெற்று வரும் நிலையில் ஆறாம் திருநாள் நேற்று திருமுக்குளம் அருகே உள்ள எண்ணெய் காப்பு மண்டபத்தில் ஸ்ரீ ஆண்டாள் எழுந்தருளினார். தொடர்ந்து நடைபெற்ற எண்ணெய்க்காப்பு உற்சவத்தின் போது ஒரு நாட்டின் மகாராணிக்கு எவ்வித உபசாரங்கள் நடைபெறுகிறதோ அவை அனைத்தும் ஸ்ரீ ஆண்டாளுக்கு நடைபெறும். அதாவது காலையில் எழுந்து பல் துலக்குவது முதல் வெற்றிலை பாக்கு போட்டு வாய் சுத்தம் செய்வது, தலைக்கு எண்ணெய் சாற்றுவது உள்ளிட்ட அனைத்தையும் பட்டாச்சாரியார் ஸ்ரீ ஆண்டாளுக்கு செய்விப்பார் பின்பு நீராட்டு நடைபெறும். எண்ணெய்க்காப்பு உற்சவத்தின் முக்கிய நிகழ்வான சவுரி திருமஞ்சனம் மற்றும் மூக்குத்தி சேவை நடைபெற்றது ஆண்டாள் திருக்கோளத்தில் எழுந்தருளுவதை காண ஏராளமான பக்தர்கள் எண்ணெய்காப்பு மண்டபத்திற்கு வருகை தந்தனர்.