காலை உணவு திட்டத்தால் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு - ஆட்சியர்

காலை உணவு திட்டத்தால் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு - ஆட்சியர்

மாவட்ட திட்டக்குழுக் கூட்டம்

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை 3 சதவீதம் அதிகரித்துள்ளது மாவட்ட திட்டக்குழுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பெருமிதம்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட திட்டக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம், மற்றும் மாவட்ட திட்டக்குழு தலைவர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், தேசிய ஊரக குடிநீர் வழங்கும் திட்டம் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்த போது, பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களை அரசு அலுவலர்கள் சரியான முறையில் மக்களிடையே எடுத்துச் செல்ல வேண்டும். திட்டங்களின் பயன்கள் குறித்து பொதுமக்களிடையே தெரியப்படுத்த வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி செல்லாமல் இடைநிற்றலில் உள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்துவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் 267 பள்ளிகளைச் சார்ந்த 16,174 மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை 3 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். பெரம்பலூர் மாவட்டம் இதுபோன்று இன்னும் பல்வேறு வளர்ச்சிகளை அடைவதற்கு அரசு அலுவலர்கள் முழு ஒத்துழைப்பினை நல்க வேண்டும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் திட்டக்குழு உறுப்பினர்கள் பாஸ்கர், மகாதேவி, முத்தமிழ்ச்செல்வி, டாக்டர். கருணாநிதி, அருள்செல்வி, ஹரிபாஸ்கர், செல்வலட்சுமி, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள் பெரம்பலூர் மீனா அண்ணாத்துரை, வேப்பூர் பிரபா செல்லப்பிள்ளை நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன், நகராட்சி ஆணையர் இராமர், லெப்பைக்குடிகாடு பேரூராட்சி தலைவர்கள்ஜாகீர் உசேன் , குரும்பலூர் சங்கீதா ரமேஷ், அரும்பாவூர் வள்ளியம்மை, பூலாம்பாடி பாக்கியலட்சுமி மற்றும் அனைத்து பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்ளிட்ட அரசுதுறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story