தகுதியுடைய அனைவருக்கும் உரிமைத் தொகை: அமைச்சர்

தகுதியுடைய அனைவருக்கும் உரிமைத் தொகை: அமைச்சர்

நிகழ்ச்சி


திருவண்ணாமலை:- திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், சேவூர் தனியார் திருமண மண்டபத்தில் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் இரண்டாம் கட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்து மகளிர்களுக்கு வங்கி பற்று அட்டைகளை நேற்று வழங்கி பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செப்டம்பர்-15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் இத்திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

அதன் விளைவாக ஏற்கனவே முதற்கட்டமாக மகளிர் உரிமைத் தொகை வழங்கல் நிறைவுபெற்றன. திருவண்ணாமலை மாவட்டத்தில் 1944 குடும்ப அட்டைகளில் ஏற்கனவே 6 இலட்சத்து 34 ஆயிரத்து 604 பயனாளிகள் விண்ணபித்துள்ளனர். இதில் முதற்கட்டமாக இம்மாவட்டத்தில் 3 இலட்சத்து 86 ஆயிரத்து 812 குடும்ப அட்டைதாரர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வங்கி பற்று அட்டை வழங்கப்பட்டன.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முதற்கட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்கள் மேல்முறையீடு செய்யுமாறு வலியுறுத்தினார்.

அதன் விளைவாக இம்மாவட்டத்தில் மனு அளித்ததை பரிசிலீனை செய்து நேற்று 2-ம் கட்டமாக ஆரணியில் 26,295 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் திருவண்ணாமலை-4,308 பயனாளிகள், செங்கம்-3,266 பயனாளிகள், கீழ்பென்னாத்தூர்-1,942 பயனாளிகள், தண்டராம்பட்டு- 2,030 பயனாளிகள், ஆரணி-2950 பயனாளிகள், போளுர்-2214 பயனாளிகள், ஜமுனாமரத்தூர்-542 பயனாளிகள், கலசபாக்கம்-11069 பயனாளிகள், செய்யார்-1978 பயனாளிகள், வந்தவாசி-3120 பயனாளிகள்,வெம்பாக்கம் - 1379 பயனாளிகள், சேத்துபட்டு-1397 பயனாளிகள் என ஆகமொத்தம் 26,295 பயனாளிகள் பயன் அடைந்து உள்ளனர்.

புறநானூற்றில், "ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே,சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக கடனே,வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே, நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே, ஒளிறு வாள் அருஞ்சமம் முருக்கி களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.” யார் யார் என்னென்ன கடமைகளைச் செய்யவேண்டும் என்று மகனைப் பெற்ற தாய் ஒருத்தி கூறுகிறாள்.


மகனைப் பெற்றுப் பேணிக் காத்தல் என் தலையாய கடமை,மகனைப் படிக்கவைத்துச் சான்றோனாக விளங்கச்செய்தல் அவன் தந்தையின் கடமை. போர் புரிய வேலை வடித்துக்கொடுத்தல் ஊர்க் கொல்லனின் கடமை, நன்னடத்தை உள்ளவனாக விளங்கச் செய்தல் வேந்தனின் கடமை, வாளைச் சுழற்றி போர்களத்தில் பகைவேந்தன் யானையை வீழ்த்திவிட்டு வெற்றியுடன் திரும்புதல் காளையின் கடமை என அதில் உள்ள ஒவ்வொருத்தரின் கடமைகளைப் பற்றி பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சர் எடுத்துரைத்தார். மேலும் பெரியாரின் எண்ணங்கள், அண்ணாவின் கொள்கைகள் மற்றும் கலைஞரின் திட்டங்கள் இவை மூன்றையும் நிறைவேற்றும் ஆட்சித் தான் திராவிட மாடல் ஆட்சி,இம்மாவட்டத்தில் பெண் வாக்காளர்கள் தான் அதிகமாக உள்ளனர். ஒரு காலத்தில் பெண்களுக்கு எந்த சுதந்திரமும் கிடையாது. பெண்களுக்கு ஓட்டுரிமை வாங்கி கொடுத்தது நீதி கட்சி தான். அதேபோல் வளர்ந்த நாடான அமெரிக்காவில் கூட பெண்களுக்கு ஓட்டுரிமை இல்லை.

253 ஆண்டு காலம் நம்மை ஆங்கிலேயர்கள் ஆட்சிசெய்து மக்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர்.திராவிட கட்சிகள் தான் பெண்களுக்கு வாக்குரிமை வாங்கி கொடுத்தது. இன்றும் பெண்கள் பெரும் பதவிகளில் பதவி வகிக்கின்றனர். அதற்கு காரணம் திராவிட மாடல் ஆட்சி.பெண்கள் படிப்பதற்க்கு காரணம் மும்மூர்த்திகளில் ஒன்று பெரியார். இரண்டாவது அண்ணா, மூன்றாவது முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தான் பெண்கள் முன்னேற்றத்திற்காக பெரும் பங்கு வகித்தனர்.

அரசு தேர்வுகளில் கூட பெண்கள் தான் முதல் மதிப்பெண் பெறுகிறார்கள்.ஒரு காலத்தில் காவல்துறையில் ஆண்கள் பணிபுரிந்தார்கள். ஆனால் நேற்று பெண்களை காவல்துறையிலும், உள்ளாட்சியிலும் பணிபுரிய வைத்தவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தான். ஊராட்சி மன்றத் தலைவர், கவுன்சிலர், ஒன்றியக்குழு தலைவர் போன்ற பதவிகளில் பதவி வகிக்கின்றனர்.பெண்களின் வளர்ச்சி பற்றி சிந்திக்கிற ஆட்சித்தான் திராவிட மாடல் ஆட்சி. "தற்காத்து தற்கொண்டார் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்" தன்னையும் காத்துத் தன்னைக் கொண்ட கணவனையும் பேணி நன்மையமைந்த புகழ்களையும் படைத்துச் சோர்வின்மை உடையவளே பெண்ணென்று சொல்லபடுபவள் என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முனன்ரே திருவள்ளுவர் எழுதியுள்ளார்.

பெண்கள் காலை எழுந்தவுடன் பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்புவது, ஆண்களுக்கு உணவு சமைப்பது என பல்வேறு வேலைகள் செய்கின்றனர் என்பதால் அதையெல்லாம் கருத்தில் கொண்டு அவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. இது இலவசமில்லை.பெண்களின் உரிமைத்தொகை. இம்மாவட்டத்தில் வழங்கப்பட்டு உள்ளது. 65 சதவீத மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மேலும் தகுதியான பெண்கள் அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை முதற்கட்டமாக இருந்தாலும், இரண்டாம் கட்டமாக இருந்தாலும் தகுதியுடைய அனைத்து பெண்களுக்கும் சென்றடைய வேண்டுமென மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எண்ணுகிறார். அதில் ஏற்கனவே முதற்கட்டம் முடிவடைந்து விட்டது. இப்பொழுது இரண்டாம் கட்டம் நடைபெறுகிறது.

இம்மாவட்டத்தில், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு கீழ் பணிபுரியும் அலுவலர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தகுதியுடைய அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையினை பெற்றுத் தருவோம் என பொதுப்பணித்துறை அமைச்சர் பேசினார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணைத்தலைவர் கு.பிச்சாண்டி. மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ். சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி (செங்கம்).எஸ்.அம்பேத்குமார் (வந்தவாசி), பெ.சு.தி.சரவணன் (கலசபாக்கம்), ஓ.ஜோதி(செய்யார்).

மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் .மு.பிரியதர்ஷினி, இயக்குநர், செய்யார் கூட்டுறவு சக்கரை ஆலை எம்.எஸ்.தரணிவேந்தன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன், நகர்மன்ற தலைவர்.ஏ.சி.மணி. ஒன்றியக்குழு தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள். வருவாய் கோட்டாட்சியர் ம.தனலட்சுமி (ஆரணி,வட்டாட்சியர் மஞ்சுளா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story