எலவனூரில் ஆடல், பாடலுடன் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம், எலவனூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே,மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் & காலநிலை மாற்றத்துறை உதவியுடன், தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் & தோழர்களம் தன்னார்வ நண்பர்கள் தொண்டு நிறுவனம் இணைந்து, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தெரு நாடகம் நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் தோழர்களம் நிறுவனர் தலைவர் தி.க.சண்முகம் மற்றும் தமிழன் சு. கவின் குமார் தொண்டு நிறுவன செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். திடக்கழிவு மேலாண்மையை பின்பற்றுவது, நீர்நிலைகள் பாதுகாப்பு, ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பை மற்றும் பொருட்களை தவிர்ப்பது,
தொடர்பான தகவல்களை பொதுமக்கள் அறியும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும்,பாரம்பரிய முறையில் சில்வர் டம்ளர்,கண்ணாடி டம்ளர், தட்டு, வாழை இலை இவற்றை பயன்படுத்த வேண்டும் எனவும், துணி பைகளை பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வை தெரு நாடகங்கள் மூலம் ஆடி, பாடி, நடித்துக் காட்டி,
சுற்றுச்சூழல் கருத்துக்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் மற்றும் துணி பைகளை பொதுமக்களுக்கு வழங்கினர். இதில் தோழர் களம் நிர்வாகிகள், தொண்டு நிறுவன நிர்வாகிகள் செல்வி செல்வம், முருகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை அந்தப் பகுதி பொதுமக்கள் கண்டும், கேட்டும் ரசித்து மகிழ்ந்தனர்.