சம வேலைக்கு சம ஊதியம்: ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்
மெக்னீசியம் எனப்படும் வெள்ளைக்கல் வெட்டி எடுத்து சேலம் உருக்காலைக்கு அனுப்பி வரும் செயில் ரீ பேக்டரி நிறுவனத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருகின்றனர்.
தனியார் நிறுவனத்திடம் இருந்து சேலம் உருக்காலை இந்த ஆலையை வாங்கிய போது பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவதாக அதிகாரிகள் ஒப்புதல் வழங்கினர். ஆனால் 15 வருடங்களுக்கு மேலாக போராடியும் சம ஊதியம் பெற முடியாமல் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.
இதனிடையே ஆலையில் மேற்கொள்ளப்படும் பணிகளை தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு செயில் நிர்வாகம் அண்மையில் வழங்கி உள்ளது. அந்த தனியார் ஒப்பந்ததாரர் 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வேலை வழங்குவதால் ஆலையின் வழக்கமான பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் பணியாளர்களும் ஊதியம் இன்றி தவித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை கண்டித்து 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் செயில் ரீ பேக்டரி நிறுவன வளாகத்தில் நேற்று மாலை முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2-வது நாளாக இன்றும் போராட்டம் நடந்து வருகிறது.