பழங்குடியினர் குடியிருப்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா.
உதவிகள் வழங்கல்
திருத்தணி ஒன்றியம், வீரகநல்லுார் ஊராட்சி, பகத்சிங் நகர் இருளர் காலனியில், 50க்கும் மேற்பட்ட பழங்குடியினர் குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பில் நேற்று திருத்தணி பீகாக் மருத்துவமனை மற்றும் கிரண் பவுண்டேசன் சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
இதில், பீகாக் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் ஸ்ரீகிரண் பங்கேற்று, பழங்குடியின குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி கொண்டாடினார். தொடர்ந்து, பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் மொத்தம், 100க்கும் மேற்பட்டோருக்கு புத்தாடைகளை மருத்துவர் ஸ்ரீகிரண் வழங்கி, அடுத்தாண்டில் உங்கள் அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தருவதற்கு உதவி செய்கிறேன் என உறுதியளித்தார்.
தொடர்ந்து அனைவருக்கும் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வீரகநல்லுார் ஊராட்சி தலைவர் காதர் பாஷா, தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் அந்தோணி உள்பட பலர் பங்கேற்றனர்.