புதிய திட்ட பணிகளுக்கு முன்னாள் அமைச்சர் பூமி பூஜை
பூமிபூஜை
சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சியில் 19 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முன்னாள் அமைச்சரும், சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான டி.எம்.செல்வகணபதி பூமி பூஜை செய்து புதிய திட்ட பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்... சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மகுடஞ்சாவடி ஒன்றியம் இடங்கணசாலை பேரூராட்சியை திமுக அரசு பொறுப்பேற்றவுடன் நகராட்சியாக தரம் உயர்த்தி முதன்முதலாக நடைபெற்ற நகர் மன்ற தேர்தலில் திமுகவைச் சேர்ந்த கமலக்கண்ணன் நகர மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டு பல்வேறு அடிப்படை திட்ட பணிகள் திமுக அரசால் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாடு திட்டம், 15 வது நிதிக்குழு, 6வது மாநில நிதிக்குழு ஆகிய திட்டங்களின் நிதியிலிருந்து 19 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மண்சாலையை தார்சாலையாக மாற்றுதல், பழுதடைந்த சாலைகள், நூலகம் அமைத்தல், பேருந்து நிலையத்திலும் காடையாம்பட்டியில் வணிக வளாகம் கட்டிடம் கட்டுதல், நுண்ணுயிர் உரக்கிடங்கு அமைக்கும் பணிகளுக்கு முன்னாள் அமைச்சரும், சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான டி.எம்.செல்வகணபதி பூமி பூஜை பணிகளை துவக்கி வைத்து சிறப்பித்தார்.
தொடர்ந்து தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக இடங்கணசாலை நகராட்சிக்கு மட்டும் திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை சுமார் 60 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி கடந்த 50 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத பல்வேறு அடிப்படை வசதிக்கான திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றி தந்துள்ளதாக பேட்டி அளித்தார். அப்போது இடங்கணசாலை நகர் மன்ற தலைவர் கமலக்கண்ணன், திமுக நகர செயலாளர் செல்வம் நகராட்சி ஆணையாளர் ஜேம்ஸ் கிங்ஸ்டன் உட்பட அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் என பலரும் உடனிருந்தனர் .