லஞ்ச வழக்கு பதியப்பட்டவருக்கு அமைச்சர் பொறுப்பு - தளவாய் சுந்தரம்
தமிழக முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான தளவாய் சுந்தரம் எம் எல் ஏ நிருபருபர்களிடம் கூறியதாவது:- எம்.ஜி.ஆரால் 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் நாள் அதிமுக தொடங்கப்பட்டது. அதிமுக இயக்கத்தை அசைத்து பார்க்க நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள். இந்த இயக்கத்தை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தன்னை அறிவாளி என நினைத்து அழிவுப்பாதைக்கு வழி வகுத்துக் கொண்டிருக்கிறார் தற்போதைய தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி. அமைச்சர் ரகுபதி அதிமுகவில் வளர்ந்தவர், அடையாளம் காட்டப்பட்டவர். தனது வளர்ச்சிக்காக சொத்துக்களை பாதுகாப்பதற்காக கட்சியை பயன்படுத்தி ஆட்சி மாற்றத்தின் போது இவற்றையெல்லாம் பாதுகாக்க அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர். தற்போது தனது வளர்ச்சிக்கு காரணமான அதிமுகவை மறந்து வசைபாடி வருகிறார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சி காலத்தில் ரகுபதி மீது அளவுக்கு அதிகமாக சொத்து குவிப்பு சம்மந்தமாக லஞ்ச ஒழிப்புத்துறையின் மூலம் சொத்து குவிப்பு வழக்கும் தொடரப்பட்டது. ஆனால் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் லஞ்ச ஒழிப்புத்துறை நிர்வகிக்கும் அமைச்சர் பொறுப்பை ரகுபதிக்கு கொடுத்துள்ளார். இது வேடிக்கையாகவும் விந்தையாகவும் உள்ளது. திமுகவில் தற்போதைய உட்கட்சி பூசலை மூடி மறைப்பதற்கும் முதலமைச்சரை திருப்திப்படுத்துவதற்கும் அதிமுகவை பற்றி அவதூறாக பேசி வருகிறார் அமைச்சர் ரகுபதி. அதிமுகவுக்கு துரோகம் செய்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.