பார் ஊழியர் கொலையில் முன்னாள் உரிமையாளர் கைது
கோவில்பட்டியில் பார் ஊழியர் கொலையில் தேடப்பட்டு வந்த முன்னாள் பார் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டியில் பார் ஊழியர் கொலையில் தேடப்பட்டு வந்த முன்னாள் பார் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள டாஸ்மாக் மதுபான பாரை காந்தி நகரைச் சேர்ந்த முருகன் என்பவர் நடத்தி வருகிறார். இங்கு இந்திரா நகரை சேர்ந்த குருசாமி (வயது 60) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் மதுபான பாருக்கு வந்த முன்னாள் பார்உரிமையாளரான சிதம்பரம்பட்டியை சேர்ந்த சங்கரபாண்டி குடிப்பதற்கு ஓசியில் மதுபாட்டில் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த சங்கரபாண்டி அரிவாளால் குருசாமியை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுகாதேவி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், ராஜேந்திரன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் அவரை தேடிவந்தனர். கோவில்பட்டியை அடுத்துள்ள ஆலம்பட்டி கண்மாய் அருகில் பதுங்கி இருந்த சங்கர பாண்டியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் சங்கர பாண்டியை தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். பின்னர் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்திய மேற்கு போலீசார் கோர்ட்டில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story